Published : 29 Jan 2015 10:31 AM
Last Updated : 29 Jan 2015 10:31 AM
பெஷாவரில் பள்ளி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து, பள்ளி ஆசிரியர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கவும், துப்பாக்கிகளை ஆசிரியர்கள் பள்ளிக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கவும் கைபர் பக்துன்க்வா மாகாண கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளி மீது கடந்த டிசம்பர் மாதம் 16-ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 132 பள்ளிக் குழந்தைகள் உட்பட 150 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பள்ளி ஆசிரியர்களுக்கு துப்பாக்கி சுடும்பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கைபர் பக்துன்க்வா மாகாண கல்வி அமைச் சர் அதிஃப் கான் கூறும்போது, “துப்பாக்கி சுடும் பயிற்சி பெறுவது அனைத்து ஆசிரியர்களுக்கும் கட்டாயமல்ல. ஆனால், விருப்பமுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு, துப்பாக்கியை பள்ளிக்கு எடுத்துச் செல்ல உரிமமும் வழங்கப்படும்” என்றார். கைபர் பக்துன்க்வா மாகாண செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் முஸ்டாக் கானி இம்முடிவை உறுதி செய்துள்ளார்.
அவர் இதுதொடர்பாகக் கூறும் போது, “இம்மாகாணத்திலுள்ள 35,000 பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைப் பாதுகாக்க போதுமான காவல் துறையினர் இல்லை. எனவேதான், ஆசிரியர்கள் துப்பாக்கிகளை எடுத் துச் செல்ல அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
கடந்த வாரம் முதல், துப்பாக்கிகளை எப்படி இயக்குவது என்பது குறித்து பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரண்டு நாட்களுக்கு இப்பயிற்சியை வழங்குகின்றனர்.
தனியார் பள்ளிகள் எதிர்ப்பு
ஆனால், தனியார் பள்ளி ஆசிரியர்கள் இம்முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தனியார் பள்ளி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் மாலிக் காலித் கான் கூறும்போது, “வகுப்பில் ஒருகையில் துப்பாக்கியுடனும், மறு கையில் புத்தகத்துடனும் எப்படி பாடம் சொல்லிக் கொடுக்க முடியும். இது எங்கள் வேலையல்ல. கற்றுக் கொடுப்பதுதான் எங்கள் வேலை. ஆசிரியர்கள் கையில் துப்பாக்கி வைத்திருப்பது, மாண வர்களின் மனதில் எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தி விடும். போலீஸாரின் எண்ணிக்கை குறை வாக இருந்தால், அதிகமானவர் களை பணிக்கு எடுக்க வேண்டும” எனத் தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் உள்ள பள்ளி களில் பாதுகாப்பை பாகிஸ்தான் அரசு பலப்படுத்தியிருக்கிறது. அங்கு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சுவர்களின் உயரத்தை அதிகரித்து, கம்பி வேலிகள் கட்டப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT