Published : 19 Jan 2015 08:43 AM
Last Updated : 19 Jan 2015 08:43 AM
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சவின் தோல்விக்கு இந்திய உளவு அதிகாரி ஒருவர் முக்கியப் பங்காற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய உளவுத் துறையின் (ஆர்.ஏ.டபுள்யூ - ரா) கொழும்பு அலுவலகத்தில் பணியாற்றி வந்த இந்த அதிகாரியை, அதிபர் தேர்தலின்போது இலங்கை வெளியேற்றியது. இதற்கு அந்த அதிகாரி ராஜபக்சவை பதவியிலிருந்து அகற்ற எதிர்க்கட்சிகளுக்கு உதவிவந்ததே காரணம் என்று உளவுத்துறை மற்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் இத்தகவலை மறுத்தார். “வழக்கமான பணியிடமாற்ற நடவடிக்கைதான் இது” என்றார் அவர். ஆனால், “ராஜபக்சவின் அமைச்சரவையில் இருந்து விலகுமாறு மைத்ரிபால சிறிசேனாவை அந்த அதிகாரி தூண்டினார். பிறகு சிறிசேனாவுக்கு ஆதரவு திரட்டினார். இதனால் அந்த அதிகாரியை திரும்ப அழைத்துக்கொள்ளுமாறு கடந்த டிசம்பரில் இந்தியாவிடம் இலங்கை கேட்டுக்கொண்டது” என்று கொழும்பு மற்றும் டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், “ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிடுவதில்லை என்ற முடிவை முக்கிய எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரனில் விக்கிரமசிங்கே ஏற்கும்படிச் செய்தார். வெற்றி வாய்ப்புள்ள சிறிசேனாவை ரனில் ஆதரிக்கும்படிச் செய்தார்.
சிறிசேனாவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருந்த முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவுடனும் அந்த அதிகாரி நெருங்கிய தொடர்பில் இருந்தார்” என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் சன்டே டைம்ஸ் நாளேட்டில் கடந்த டிசம்பர் 28-ம் தேதி இதுதொடர்பாக ஒரு செய்தி வெளியானது. “எதிர்க்கட்சிகளுடன் தொடர்பில் இருந்ததால் கொழும்புவில் உள்ள இந்திய உளவுத் துறை அலுவலக தலைமை அதிகாரி பதவியிழக்க நேரிட்டுள்ளது” என்று அச்செய்தி தெரிவிக்கிறது.
இந்தியா மறுப்பு
இலங்கையிலிருந்து இந்திய உளவுத் துறை அதிகாரி வெளியேற்றப்பட்டதாக வெளியான தகவலை இந்தியா மறுத்துள்ளது.
இதுகுறித்து டெல்லியில், வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் நேற்று கூறும்போது, “இலங்கையில் பணியாற்றும் இந்திய அதிகாரியின் வழக்கமான பணிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். கடந்த ஆண்டு இடமாற்றம் செய்யப்பட்ட அனைத்து அதிகாரிகளும் தங்கள் பணிக்காலத்தை பூர்த்தி செய்துள்ளனர். எனவே குறிப்பிட்ட அதிகாரியின் இடமாற்றமும் வழக்கமான ஒன்றே. ஆதாரமற்ற, உண்மைக்கு மாறான இதுபோன்ற தகவல்களை ஊடகங்கள் வெளியிட வேண்டாம். அவ்வாறு வெளியிட்டால் இறுதியில் எனது மறுப்பையும் தெரிவியுங்கள்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT