Last Updated : 08 Jan, 2015 10:28 AM

 

Published : 08 Jan 2015 10:28 AM
Last Updated : 08 Jan 2015 10:28 AM

பூமியை போன்ற கிரகங்கள் கண்டுபிடிப்பு: மனிதர்கள் வசிக்க முடியும் என நாசா அறிவிப்பு

பூமியைப் போன்று மனிதர்கள் வசிப்பதற்கு உகந்ததாக விண்வெளியில் இரண்டு புதிய கிரகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நாசா கூறியுள்ளது.

விண்வெளியில் பூமியைப் போன்ற புதிய கிரகங்களை அடையாளம் காண்பதற்காக 'கெப்ல‌ர் மிஷன்' எனும் தொலை நோக்கியை விண்வெளியில் நாசா செலுத்தியது. கடந்த 2009ம் ஆண்டு செலுத்தப்பட்ட இந்த தொலைநோக்கி இதுவரை 1,50,000‍-க்கும் மேற்பட்ட‌ நட்சத்திரங்களை கண்காணித்துள்ளது. அதன் மூலம் இதுவரை 4,175 பூமியைப் போன்ற கிரகங்களை அது அடையாளம் கண்டுள்ளது. இவற்றில் 1,000‍-மாவது கிரகத்தை சமீபத்தில் விண்வெளி ஆய்வாளர்கள் சோதித்தனர்.

இந்நிலையில், புதிதாக மேலும் எட்டு கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் இரண்டு கிரகங்கள் பெருமளவில் பூமியைப் போலவே இருப்பதாக விண்வெளி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த இரண்டு கிரகங்களில் ஒன்றுக்கு கெப்லர்-438பி என்றும், இன்னொன்றுக்கு கெப்லர்-442பி என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளன.

இந்த கிரகங்களில் பாறைகள் உள்ளன என்றும், அதிகளவில் வெப்பமாகவும் இல்லாமல் அதே சமயம் குளிராகவும் இல்லாமல் தண்ணீர் இருப்பதற்கான‌ மிதமான தட்பவெப்பம் நிலவுவதாலும் இங்கு உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த கிரகங்களில் உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் தென்பட்டாலும் அதுகுறித்து மேலும் அறிவது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காரணம், இந்த இரண்டு கிரகங்களும் பூமியில் இருந்து பல நூறு ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கின்றன.

இதில் கெப்லர்-438பி பூமியில் இருந்து 470 ஒளி ஆண்டுகள் தொலைவிலும் கெப்லர்-442பி கிரகம் 1,100 ஒளி ஆண்டுகள் தொலைவிலும் உள்ளன. முன்னது தன்னுடைய நட்சத்திரத்தை 35 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வர, பின்னது தன்னுடைய நட்சத்திரத்தை 112 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது.

இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறும்போது, "இந்தக் கிரகங்கள் உயிர்கள் வாழ்வதற்கு வசதியானவை என்று அறுதியிட்டுக் கூற முடியாது. ஆனால் மனிதர்கள் வசிப்பதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளை அதிகளவில் கொண்டவை என்று மட்டுமே இப்போதைக்குச் சொல்ல முடியும்" என்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x