Published : 08 Jan 2015 12:04 PM
Last Updated : 08 Jan 2015 12:04 PM
பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ வார இதழ் அலுவலகத்தில் 12 பேரை பலிகொண்ட தீவிரவாதத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று சரணடைந்த 18 வயது இளைஞர் ஒருவரை, பிரான்ஸ் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பிரான்ஸ் போலீஸாரிடம் சரணடைந்துள்ள இளைஞரது பெயர் ஹமித் மொராத் என்று தெரியவந்துள்ளது. மேலும், அந்த இளைஞர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது போன்ற விவரங்கள் வெளியாகவில்லை.
சரணடைந்துள்ள இளைஞர், மற்ற இருவரை தப்பித்து செல்ல உதவி செய்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ என்ற வார பத்திரிகை அலுவலகத்தினுள் புதன்கிழமை அன்று புகுந்த முகமூடி அணிந்த 3 நபர்கள் அந்த அலுவலகத்தின் ஒவ்வொரு பகுதியாக சென்று கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் பத்திரிகையின் அசிரியர், 4 கார்ட்டூனிஸ்டுகள் உட்பட 12 பேர் பலியாகினர். மேலும் 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சார்லி ஹெப்டோ அலுவலகத்தினுள் 3 முகமூடி அணிந்த நபர்கள் நடத்திய தாக்குதல் காட்சி அங்கு வெளியே பொறுத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. இதில், தாக்குதல் நடத்திய 3 பேர்களில் இருவர் மட்டும் அலுவலகத்தின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறி அருகே இருந்தவர்களை மோதியபடி துப்பாக்கிச் சூடு நடத்தியவாறு 'அல்லாஹு அக்பர்' என்று முழக்கமிட்டு செல்வது பதிவாகியுள்ளது.
தாக்குதல் சம்பவம் நடந்த செய்திகள் வெளியான பல மணி நேரங்களுக்கு பின்னர், தாக்குதலில் ஈடுபட்டதாக கருதப்படும் இளைஞர், பாரீஸ் நகரின் பெல்ஜியம் எல்லை அருகே உள்ள காவல் நிலையத்தில் சரணடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபத்தில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத் தலைவன் அபுபக்கர் அல் பக்தாதியை கிண்டல் செய்யும் வகையில் இந்த பத்திரிகையில் கார்ட்டூன் வெளியாகி இருந்தது. இதற்கு பழி வாங்கும் வகையில் இத்தாக்குதல் நடந்திருக்கலாம் என்று தெரிகிறது.
2011-ம் ஆண்டு முகமது நபியைப் பற்றிய ஒரு கட்டுரையை வெளியிட்டதாக இதே பத்திரிகை அலுவலகத்தின் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.
தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாரீஸ் நகரம் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நகரில் அனைத்து பகுதிகளிலும் தீவிரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT