Last Updated : 29 Jan, 2015 01:31 PM

 

Published : 29 Jan 2015 01:31 PM
Last Updated : 29 Jan 2015 01:31 PM

தீவிரவாதிகளுடன்தான் வாழ்கிறேன்: பிரான்ஸில் 8 வயது சிறுவனின் பேச்சால் அதிர்ச்சி

பிரான்ஸில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு ஆதரவாக 8 வயது சிறுவன் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீவிரவாத தாக்குதல் சம்பவத்தால் தீவிர பாதிப்புக்குள்ளானதே சிறுவனின் பேச்சுக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தில் கடந்த 7-ம் தேதி புகுந்த இரண்டு தீவிரவாதிகள் பத்திரிகையில் ஆசிரியர், கார்டூனிஸ்ட் என 12 பேரை சுட்டுக் கொன்றனர். அதைத் தொடர்ந்து பல்பொருள் அங்காடியில் புகுந்து பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த 4 பேரையும் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அதில், தாக்குதல் நடத்திய 2 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பாரீஸ் நகரில் 3 நாட்களாக தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் உலக நாடுகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில், தலைநகர் பாரீஸில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து நைஸ் நகரைச் சேர்ந்த பள்ளியில் ஒரு நிமிட மவுன பிராத்தனை அனுசரிக்கப்பட்டது.

இதில் பள்ளியின் அனைத்து மாணவர்களும் பங்கேற்றனர். ஆனால், அந்தப் பள்ளியைச் சேர்ந்த 8 வயது மிக்க சிறுவன் மட்டும் அதற்கு மறுப்பு தெரிவித்தார்.

இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்திய ஆசிரியையிடமும் வழக்கத்துக்கு மாறான விதத்தில் பேசி, தீவிரவாதத்துக்கு ஆதரவான கருத்துக்களை கூறியுள்ளார்.

இதனை அடுத்து சிறுவனின் போக்கு குறித்து போலீஸிடம் பள்ளி நிர்வாகம் உதவியைக் கோரினர். இது குறித்து சிறுவனின் ஆசிரியை கூறும்போது, "தாக்குதல் நடத்திய நபர்களுக்கு ஆதரவாகவே அச்சிறுவன் பேசினார். விளக்கம் அளித்த நிலையிலும் அவர் தனது கருத்திலிருந்து மாறவில்லை" என்றார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்யாத நைஸ் நகர போலீஸார், சிறுவனின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் போலீஸ் விசாரணையின்போது சிறுவனிடம், தீவிரவாதிகளுக்கு எதற்கு ஆதரவு தெரிவிக்கிறாய்? என்று கேட்டனர். அதற்கு அந்தச் சிறுவன் 'நான் தீவிரவாதிகளுடன்தான் இருக்கிறேன்' என்றார்.

தீவிரவாதிகள் என்றால் யார்? என்று கேட்டதற்கு, தெரியாது என்று கூறியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுவனின் பேச்சால் விசாரணை நடத்திய போலீஸாரும் பள்ளி நிர்வாகிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து பிரான்ஸின் அமைப்பு ஒன்று அளித்துள்ள அறிக்கையில், "சிறுவனும் அவனது பெற்றோரும் ஜனவரி முதல் வாரத்தில் நடந்த சம்பவங்களால் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவை அனைத்தும் சிறுவனின் ஆழ் மனதில் நிலைத்துள்ளது. இது தான் சிறுவனது பேச்சுக்கு காரணம்" என்று தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சிறுவனுக்கும் அவனது குடும்பத்தினருக்கும் கவுன்சிலிங் அளிக்க போலீஸார் ஆலோசித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x