Published : 28 Jan 2015 01:06 PM
Last Updated : 28 Jan 2015 01:06 PM
கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 15 பேர் திபெத் விடுதலை இயக்கத்துக்கு ஆதரவு அளித்து வந்ததும், தலாய் லாமாவுக்கு ரகசிய தகவல்களை தெரிவித்து வந்ததும் விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
இது குறித்து சீன கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட விசாரணையில் சிறிய அளவிலான கம்யூனிஸ்ட் கட்சியினர் திபெத் விடுதலை இயக்கத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால், கட்சி ஒழுங்கையும், கட்டுப்பாடுகளையும் மீறியதாக 15 பேருக்கு தண்டனை உண்டு என்று தெரிவித்துள்ளது. ஆனால் தண்டனை என்னவென்பதை குறிப்பிடவில்லை.
மேலும், சீனப் பாதுகாப்பை அச்சுறுத்தும் எந்த தகவல்களை இவர்கள் தலாய் லாமாவுக்கு தெரிவித்தனர் என்பதையும், திபெத் விடுதலை தொடர்பான எந்தக் குழுவிடத்தில் இந்த கம்யூனிஸ்ட்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர் என்பதையும் சீன கம்யூனிஸ்ட் கட்சி தெரிவிக்க மறுத்துள்ளது.
தண்டனை பெற்றவர்களின் பெயர்களை அறிய பத்திரிகையாளர்கள் முயற்சி செய்தும் முடியவில்லை என்று ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
தாந்த்ரீக பவுத்த பிரிவைச் சேர்ந்த இனக்குழு திபெத்தியர்களாக அவர்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த பவுத்தப் பிரிவுக்கு தலாய் லாமா ஆன்மீக தலைவர் என்றும் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT