Published : 29 Apr 2014 09:40 PM
Last Updated : 29 Apr 2014 09:40 PM
இணையத்தில் எந்த மாதிரியான தகவல்கள் வேகமாகப் பரவும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, சமூக இயக்கங்கள், நுகர்வோரின் எதிர்வினைகள், மக்களிடையே பரவக்கூடிய நோய்களைக்கூட இரண்டு மாதங்கள் முன்னரே தெரிந்துகொள்ள முடியும் என்றும் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
சமூக வலைதளங்களில் தினமும் கோடிக்கணக்கான தகவல்கள் பார்க்கப்படுவதோடு, பலராலும் பகிரப்படுகின்றன. ட்விட்டரில் 50,000 பேரின் கணக்குகளை கண்காணிப்பதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படுவுள்ள சமூக இயக்கங்கள் உள்ளிட்டவற்றை முன்கூட்டியே கணிக்க முடியும் என்று அந்த ஆய்வின் முடிவு கூறுகிறது.
இந்த ஆய்வு குறித்து ஸ்பெயினின் மாட்ரிட் கார்லோஸ் 3 பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எஸ்டெபான் மோரோ கூறும்போது, "இப்படி கண்காணிப்பதன் மூலம் இணையத்தில் வேகமாகப் பரவும் (viral) விஷயங்களை கணித்து, அதன்மூலம் சமூக இயக்கங்கள், மக்களிடையே நடக்கும் விவாதங்கள், விமர்சனங்கள், அவை எப்படி சர்வதேச அளவில் பேசப்படுகின்றன என்பதை கணிக்கலாம்" என்றார்.
"சராசரியாக ஒவ்வொரு பயனரது நண்பர்களுக்கும், அந்தப் பயனரைவிட அதிக நண்பர்கள் இருப்பார்கள். ட்விட்டரைப் பொருத்தவரை, 40 மில்லியன் பயனர்கள் மற்றும் 15 பில்லியன் பின்தொடர்பாளரகளிடம் (followers) இருந்து எடுக்கப்பட்ட மாதிரித் தகவல்களை வைத்து, ஒவ்வொரு பயனரையும் 25 பேர் தொடர்கிறார்கள் என்றும், அந்த 25 நபர்களை சராசரியாக 422 பேர் தொடர்கிறார்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மூலம், தகவல்களைப் பெறுவதிலும், பரப்புவதிலும் ஒரு பயனரைத் பின்தொடர்பவரது பங்கு அதிகமாக உள்ளது என்பது புரிகிறது" என ஸ்பெயினின் மற்றொரு பல்கலைக்கழகமான மாட்ரிடின் அட்டானோமா பல்கலையைச் சேர்ந்த மானுவல் கார்சியா தெரிவித்தார்.
உதாரணமாக, இந்த சோதனை முயற்சி #obamacare என்கிற ஹாஷ்டாக் ட்விட்டரில் பிரபலமாகும் என்பதை 2 மாதங்களுக்கு முன்கூட்டியே கணித்தது. கூகுள் தேடுதளத்திலும் இந்த வார்த்தை அதிகம் தேடப்படும் என 3 மாதங்களுக்கு முன்பே கணிக்கப்பட்டது.
இதே போல, வெவ்வேறு தலைப்புகளைப் பற்றி வெவ்வேறு மொழிகளில், வெவ்வேறு நாடுகளில் ஆராய்ச்சி செய்து, அதன் மூலம் பல்வேறு விஷயங்களை கணிக்கலாம் என இந்த ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT