Published : 18 Dec 2014 12:19 PM
Last Updated : 18 Dec 2014 12:19 PM
பாகிஸ்தானின் பெஷாவர் ராணுவ பள்ளி மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பயன்படுத்திய வாகனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவம் நடத்தி வரும் பள்ளியில் கடந்த செவ்வாய்க்கிழமை புகுந்த தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பினர் மாணவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், 132 குழந்தைகள் உட்பட 141 பேர் பலியானார்கள். ராணுவ வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் 6 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
குழந்தைகள் மீது நடத்தப்பட்ட கோடூர தாக்குதலுக்கு சர்வதேச நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்துள்ளன. தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் அரசு ஆப்கான் அரசின் உதவியை நாடியுள்ளது. இந்த நிலையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பயன்படுத்திய வாகனத்தின் உரிமையாளர் பெஷாவாரில் இன்று(வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் தாக்குதலின் போது வாகனத்தை, கைது செய்யப்பட்ட நபர் ஓட்டி வரவில்லை என்று தெரியவந்துள்ளது.
விசாரணை குறித்து பாகிஸ்தான் நாட்டு பத்திரிகையான டான் செய்தி நிறுவனத்திடம் பெஷாவர் காவல்துறை துணை ஆணையர் தஹீர் அலாம் கான் கூறுகையில், "கைது செய்யப்பட்டுள்ள ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். அவருக்கு தீவிரவாதிகளுடன் நேரடி தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் ராணுவ பள்ளியை அடைய உபயோகப்படுத்திய வாகனத்துக்கு தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபரே கடந்த 5 வருடங்களாக உரிமையாளராக உள்ளார்.
ஆனால் அந்த வாகனத்தை அவரது உறவினர்கள் சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாங்கி சென்றதாக கூறியுள்ளார். மேலும் வாகனத்தை வாங்கிச் சென்ற உறவினர் அதனை தீவிரவாதிகளின் உபயோகத்துக்காக அளித்தாரா? அல்லது அவர்களுக்கு நேரடியாக தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா? போன்ற கேள்விகளுக்கு பதில் அறியப்படவில்லை. உறவினர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT