Published : 07 Dec 2014 10:26 AM
Last Updated : 07 Dec 2014 10:26 AM
ஆர்மீனியாவைச் சேர்ந்த டேவிட் யுகன்யன் ஓவியங்கள் வித்தியாசமாகவும் வியப்பூட்டுபவையாகவும் இருக்கின்றன. ஓவியத்துக்குள்ளும் ஓவியத்தைச் சுற்றியிருக்கும் பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. பென்சிலால் மட்டும் தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள் அத்தனை அட்டகாசமாக இருக்கின்றன. ஓவியத்தின் எந்தப் பகுதியைப் பார்த்தாலும் சுவாரசியமாகவே இருக்கிறது. 26 வயது டேவிட் முழுக்க முழுக்க கைகளாலேயே ஓவியத்தைத் தீட்டுவதாகச் சொல்கிறார். மனிதர்களையும் விலங்குகளையும் கலந்து வரைவது தன்னுடைய தனித்திறமை என்கிறார். நேரம் கிடைக்கும்போது மட்டுமே ஓவியங்கள் வரைவதாகச் சொல்லும் டேவிட்டுக்கு, இசையும் மிகவும் பிடித்தமானது.
அடடா! பிரமாதப்படுத்தறீங்க டேவிட்!
பிரான்ஸ் நீதிமன்றத்தில் விநோதமான வழக்கு ஒன்று, தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. 1994ம் ஆண்டு மனோன் பிறந்தார். சில நாட்களில் மஞ்சள்காமாலைக்குச் சிகிச்சைப் பெறுவதற்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கே இன்னொரு பெண் குழந்தையும் சிகிச்சைக்காக வந்திருந்தது. சிகிச்சை முடிந்தவுடன் மனோனை வேறு பெற்றோருக்குத் தவறுதலாக மாற்றிக் கொடுத்துவிட்டனர். 10 வயதில் தன்னை வளப்பவர் தன் தாய் அல்ல என்பது மனோனுக்குத் தெரியவந்தது. பெற்ற தாய் 20 மைல் தூரத்தில் வசித்து வந்தார். நீண்ட தேடுதலுக்குப் பிறகு மனோன் தாயைச் சந்தித்துவிட்டார். இரண்டு பெண் குழந்தைகளுமே அவரவர் வளர்ப்புப் பெற்றோரிடம் இருக்கவே விரும்புகின்றனர். அதே போல பெற்றோர்களும் தங்கள் வளர்ப்பு குழந்தையையே தங்கள் குழந்தையாக ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் குழந்தையை மாற்றி, 10 ஆண்டுகள் மன உளைச்சலை ஏற்படுத்திக் கொடுத்த மருத்துவமனை, இன்சூரன்ஸ் கம்பெனிகளிடம் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள். இவர்களின் கதை ஏற்கெனவே பிரான்ஸில் வெளிவந்த சினிமாவை ஒத்திருப்பது கூடுதல் ஆச்சரியம்!
நிஜ வாழ்க்கையை சினிமாவா எடுப்பாங்க… ஒரு சினிமா நிஜமாகியிருக்கிறதே!
இறைச்சி மட்டுமின்றி, விலங்குகளின் பாலைக்கூடப் பயன்படுத்தாதவர்கள் வீகன் உணவைக் கடைப்பிடிப்பவர்கள். அமெரிக்காவில் வீகன் உணவகத்தை ஆரம்பித்தபோது, அது இவ்வளவு தூரம் வெற்றி பெறும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள் அப்ரி மற்றும் கலே வால்ச். இறைச்சியில் என்னென்ன உணவு வகைகளை எல்லாம் செய்ய முடியுமோ, அத்தனையையும் சோயாவைக் கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள். இறைச்சியைச் சாப்பிடுவது போன்ற சுவை இருப்பதால், வித்தியாசமே தெரியாது. அதனால் வீகன் உணவுக்கு ஆதரவு பெருகி வருகிறது என்கிறார்கள்.
உணவெல்லாம் அவரவர் தனிப்பட்ட விஷயம்… இந்த உணவு பழக்கத்தைத்தான் கடைப்பிடிக்கணும்னு சொல்றதெல்லாம் நாகரிகமில்லை…
கனடாவில் வசித்த இரண்டு தலை பூனை இறந்துவிட்டது. ஃப்ராங்க், லூயி என்று பெயரிடப்பட்ட இரண்டு தலை பூனைக்கு 2 வாய், 2 முக்கு, 3 கண்கள் இருந்தன. 15 ஆண்டுகள் பிரச்சினை இன்றி வசித்து வந்த இந்தப் பூனை, கேன்சரால் இறந்துவிட்டது என்கிறார்கள் கால்நடை மருத்துவர்கள். இரண்டு தலைகளுடன் நீண்ட காலம் வாழ்ந்த பூனை என்ற கின்னஸ் சாதனையையும் நிகழ்த்திவிட்டே பூனை மறைந்திருக்கிறது!
ரெண்டு தலைகளோட இத்தனை வருஷம் வாழ்ந்தது ஆச்சரியம்தான்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT