Published : 22 Dec 2014 09:57 AM
Last Updated : 22 Dec 2014 09:57 AM
வடக்கு ஆப்கானிஸ்தானில் சோதனைச்சாவடி ஒன்றின் மீது தலிபான் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் இரவு நடத்திய தாக்குதலில் 7 போலீஸார் உயிரிழந்தனர்.
ஜாஸ்ஜான் மாகாணம், கஸ்தேபா மாவட்டத்தில் இந்த சோதனைச் சாவடி உள்ளது. தலிபான் தாக்குதலில் மேலும் 5 போலீஸாரும் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு கூடுதல் போலீஸ் படை விரைந்தது. இதையடுத்து நடைபெற்ற மோதலில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில் ஆப்கானிஸ் தான் கிழக்கில் உள்ள குணார் மாகாணத்தில் அரசுப்படைகளுக் கும் தீவிரவாதிகளுக்கும் இடையி லான மோதல் ஒரு வாரத்துக்கும் மேல் நீடித்து வருவதாக மாகாண ஆளுநரின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
“இந்த மோதலில் இதுவரை 28 தீவிரவாதிகளும் 3 அப்பாவி மக்களும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த எண்ணிக்கை மாறுபடலாம்” என்றார் அவர். குணார் மாகாணத்தில் சனிக் கிழமை இரவு மற்றொரு சம்பவமாக, நாரி மாவட்டத்தில் சாலையோர குண்டுவெடித்ததில் வாகனத்தில் சென்ற 2 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டுப் படைகளில் பெரும்பாலானோர் வரும் 31-ம் தேதிக்குள் வெளியேறுகின்றனர். இந்நிலையில் பள்ளிகள், வெளிநாட்டினர் விடுதிகள் என எளிய இலக்குகளை குறிவைத்து தலிபான்கள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT