Published : 15 Dec 2014 10:49 AM
Last Updated : 15 Dec 2014 10:49 AM
பருவநிலை மாற்றம் குறித்த வரைவு ஒப்பந்தத்துக்கு ஐ.நா. மாநாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு ஒப்பந்தத்துக்கு இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
ஐ.நா. சபை சார்பில் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு பெரு தலைநகர் லிமாவில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா, இந்தியா உட்பட 190 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்றார்.
அடுத்த ஆண்டுக்குள் பருவநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச ஒப்பந்தத்தை ஏற்படுத்த ஐ.நா. சபை திட்டமிட்டுள்ள நிலையில் லிமா மாநாட்டில் வரைவு ஒப்பந்தம் தாக்கல் செய்யப்பட்டது.
வளரும் நாடுகள்தான் அதிக அளவில் கரியமில வாயுவை வெளியேற்றுகின்றன, அதனைக் குறைக்க வேண்டும் என்று வளர்ந்த நாடுகள் குற்றம் சாட்டின.
இதனை மறுத்த வளரும் நாடுகள், பருவநிலையைக் காப்பதற்கான நிதியுதவியையும் தொழில்நுட்பத்தையும் வளர்ந்த நாடுகள் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. இதனால் இருதரப்புக்கும் இடையே கருத்து மோதல்கள் வெடித்தன.
இதைத் தொடர்ந்து கடந்த இரு நாள்களாக சுமார் 38 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் பல்வேறு நாடுகள் தெரிவித்த யோசனைகளின்படி வரைவு ஒப்பந்தத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த திருத்தப்பட்ட வரைவு மசோதாவுக்கு இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகள் ஒப்புதல் அளித்தன. பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதுகுறித்து இந்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியபோது, மாநாட்டில் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது, இறுதியில் நாங்கள் விரும்பியதை பெற்றுள்ளோம் என்று தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தத்தின்படி உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டில் புவி வெப்பநிலை எவ்வளவு குறைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து 2015 நவம்பர் 1-ம் தேதி ஐ.நா. சபையிடம் அறிக்கை அளிக்க உறுதி அளித்துள்ளன.
இதைத் தொடர்ந்து 2015 டிசம்பரில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெறும் மாநாட்டில் சர்வதேச ஒப்பந்தத்தை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT