Published : 17 Dec 2014 04:35 PM
Last Updated : 17 Dec 2014 04:35 PM
பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் பள்ளி ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 132 குழந்தைகள் உட்பட 141 பேர் பலியான சம்பவத்திற்கு ஆப்கான் தாலிபான்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அப்பாவிக் குழந்தைகளைக் கொல்வது இஸ்லாமுக்கு விரோதமானது என்று அவர்கள் கண்டித்துள்ளனர்.
வடக்கு வாஜிரிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதலுக்கு பதிலடியாகவே ராணுவப் பள்ளியில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தானின் தெஹ்ரிக்-இ-தாலிபான் அமைப்பு கூறியிருந்தது.
இதனையடுத்து ஆப்கான் தாலிபான்கள் தனது கண்டனத்தில் கூறும் போது, “ஆப்கான் இஸ்லாம் எமிரகம் அப்பாவி குழந்தைகள், மற்றும் மக்களைக் கொல்வதை எதிர்க்கிறது.
அப்பாவி மக்கள், குழந்தைகளை வேண்டுமென்றே கொல்வது இஸ்லாமிய கொள்கைகளுக்கு விரோதமானது. ஒவ்வொரு இஸ்லாமிய அரசும், இயக்கமும் அடிப்படை சாராம்சத்தின் படி நடக்க வேண்டும்.
ஆப்கான் இஸ்லாமிய எமிரகம், இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதோடு, குழந்தைகளை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது” என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆப்கானில் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலியாவதற்கு பிரதானமான காரணம் தாலிபான்கள் மற்றும் பிற தீவிரவாதக் குழுக்களே என்று ஐ.நா. ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளதையடுத்து இன்று பெஷாவர் தாக்குதலுக்கு ஆப்கான் தாலிபான்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT