Published : 13 Dec 2014 12:16 PM
Last Updated : 13 Dec 2014 12:16 PM

உலக மசாலா: புரூஸ் லீயின் நகல்

காபூலில் வசிக்கும் 20 வயது அபுல்ஃபாஸில் அப்பாஸ் ஷகூரி இரண்டு விதங்களில் ஆச்சரியப்படுத்துகிறார். புரூஸ் லீயின் உருவத்தை ஒத்திருப்பவர், புரூஸ் லீயைப் போலவே தற்காப்பு கலையிலும் பிரமாதப்படுத்துகிறார். ப்ரூஸ் ஹஸாரா என்று பெயரை மாற்றிக்கொண்டவர், சின்ன வயதிலிருந்தே தற்காப்பு கலைகளைக் கற்று வருகிறார். புரூஸ் லீயைத் தன்னுடைய ஹீரோவாக நினைக்கும் ஹஸாரா, அவரைப் போலவே சில முக்கிய ஸ்டண்ட்களைச் செய்வதுதான் தனது லட்சியம் என்கிறார். பல வருடங்களாக லீயின் படங்களைக் கூர்மையாகக் கவனித்து, முறையான பயிற்சிகளை எடுத்துக்கொண்டு, அவரைப் போலவே தலை முடியை வெட்டிக்கொண்டு, நடமாடும் லீயாக வலம் வருகிறார் ஷஸாரா.

லீயின் இடத்தை யாரும் நிரப்ப முடியாதுதான்… ஆனாலும் அருகில் வந்துட்டீங்க லீ ஹஸாரா!

பின்லாந்தைச் சேர்ந்த ஜரி புல் மெண்டுலா புகழ்பெற்ற பாடி பில்டர்களில் ஒருவர். ஆனால் மற்றவர்களில் இருந்து இவர் மிகவும் வித்தியாசப்படுகிறார். ஜரியின் உடல் தசைகள் மட்டுமின்றி, தலையில் உள்ள தசைகளும் மெல்லியதாகவும் இழுக்கக்கூடிய வகையிலும் மாறிவிட்டன.

அதாவது தலையைப் பார்த்தால் மூளை வெளிவந்துவிட்டதோ என்று தோன்றும் அளவுக்கு, அத்தனை மெல்லிய தசைகளாக மாறிவிட்டன. கடந்த 15 ஆண்டுகளாக இண்டர்நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் பாடிபில்டர்ஸ் போட்டிகளில் பிரபலமானவராக இருக்கிறார் ஜரி. கடந்த ஓராண்டு காலமாக பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்காமல், புகைப்படத்தை வெளியிடாமல் இருந்த ஜரி, தற்போது தன்னுடைய தலையால் மேலும் பிரபலமடைந்துவிட்டார்.

உங்க கிட்ட மூளை இருக்கான்னு யாரும் கேட்க முடியாது ஜரி…

விலங்குகளின் தோலில் இருந்து எடுக்கப்படும் கம்பளிகளை வைத்து விதவிதமான அலங்காரப் பொருட்கள், ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. பமீலா பக்வின் வித்தியாசமான ஆடை வடிவமைப்பாளர். அவர் விலங்குகளைக் கொன்று, ஆடைகளைத் தயாரிப்பதில்லை. சாலைகளில் அடிபட்டு, உயிரிழக்கும் விலங்குகளின் தோல்களிலிருந்து மட்டுமே ஆடைகளை வடிவமைக்கிறார்.

இவரது ஆடைகள் ஆயிரம் டாலர்கள் வரை விலை போகின்றன. ஒருமுறை சாலையில் சென்றுகொண்டிருந்தபோது ரக்கூன் ஒன்று அடிபட்டுக் கிடந்தது. அதைப் பார்த்ததில் இருந்துதான் பமீலாவுக்கு இந்த யோசனை வந்தது. அமெரிக்காவில் ஒரு நாளைக்கு 10 லட்சம் விலங்குகள் சாலையில் வாகனங்களால் கொல்லப்படுகின்றன. ஆடைகளுக்காக விலங்குகளைக் கொல்லாமல், கொல்லப்பட்ட விலங்குகளில் இருந்து ஆடைகளைத் தயாரிப்பதால் பமீலாவுக்கு வரவேற்பு அதிகரித்திருக்கிறது.

அடிபடும் விலங்குகளின் எண்ணிக்கை கதிகலங்க வைக்குது…

குழந்தைகள் பிறக்கும்போது அதிகபட்சம் 3.5 கிலோ எடை வரை இருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. வாஷிங்டனில் வசிக்கும் யெஸ்ஸிகா பிரசவத்துக்காக மருத்துவமனையில் சேர்ந்தார். குழந்தை பிறந்ததும் மருத்துவர்கள் மலைத்துவிட்டனர். 6.5 கிலோ எடையுடன் இருந்தது குழந்தை. பிரசவகாலத்தில் ஏற்பட்ட நீரிழிவு பிரச்சினையால் எடை அதிகரித்திருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். தாயும் குழந்தையும் நலமாக இருக்கிறார்கள். குழந்தைக்கு என்று வாங்கி வைத்த துணிகளைத்தான் பயன்படுத்த முடியவில்லை.

இவ்வளவு எடையை எப்படிச் சுமந்தார் யெஸ்ஸிகா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x