Last Updated : 15 Dec, 2014 01:02 PM

 

Published : 15 Dec 2014 01:02 PM
Last Updated : 15 Dec 2014 01:02 PM

உலக அழகி பட்டம் வென்றார் தென்னாப்பிரிக்காவின் ரோலென்

பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடைபெற்ற 2014-ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ரோலென் ஸ்ட்ராஸ் பட்டம் வென்றார்.

24 வயதாகும் ரோலென், மிஸ் தென்னாப்பிரிக்கா பட்டத்தை வென்றவர். அவர் மருத்துவக் கல்லூரி மாணவியாவார்.ஹங்கேரியின் எடினா குல்சார் இரண்டாவது இடத்தையும், அமெரிக்காவின் எலிசபெத் சாப்ரிட் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

இந்த உலக அழகி போட்டியை உலகம் முழுவதும் 100 கோடி பேர் தொலைக்காட்சி வழியாக கண்டு கழித்தனர். இந்தியா சார்பில் கோயல் ரானா இப்போட்டியில் பங்கேற்றார். அவர் முதல் 10 இடங்களுக்குள் வந்தார். கடைசியாக 2000-ம் ஆண்டில் இந்தியாவின் பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் வென்றார்.

21 வயதாகும் கோயல் ஜெய்ப்பூரில் பிறந்தவர். முதல் 10 இடத்துக்குள் வந்த அவரால், முதல் 5 இடத்துக்கு முன்னேற முடியவில்லை. எனினும் அவர் அணிந்து நடைபோட்ட மயில்தோகை மாடல் கவுன் அனைவரையும் கவர்ந்தது. இது சிறப்பு பரிசை பெற்றுத் தந்தது. பீச் அழகிகள் பிரிவில் முதல் 5 இடத்துக்குள் கோயல் வந்தார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 121 அழகிகள் இப்போட்டியில் பங்கேற்றனர். பட்டம் வென்ற ரோலெனுக்கு கடந்த ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிலிப்பைன்ஸின் மிகன் யங், உலக அழகிக்கான கிரீடத்தை சூட்டினார்.

சுமார் 69 ஆண்டுகளுக்குப் பிறகு லண்டனில் மீண்டும் உலக அழகி போட்டி நடைபெற்றது. நவம்பர் 20-ம் தேதி முதல் டிசம்பர் 14-ம் தேதி வரை நடைபெற்ற பல்வேறு சுற்றுகளில் நடை, பல்வேறு உடை அழகு, பேச்சு நளினம், மேக்கப், பொது அறிவு என போட்டிகளில் அழகிகள் பங்கேற்றனர்.

முன்னதாக உலக அழகி போட்டியில் பங்கேற்க பயணம் மேற்கொள்ள இருந்த அன்று ஹோண்டுராஸ் நாட்டு அழகி மரியா ஜோஷ் தனது சகோதரியுடன் சுட்டுக் கொல்லப்பட்டதால் இப்போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் எவ்வித இடையூறும் இன்றி உலக அழகி போட்டி நடைபெற்றது.