Last Updated : 11 Dec, 2014 05:40 PM

 

Published : 11 Dec 2014 05:40 PM
Last Updated : 11 Dec 2014 05:40 PM

கடல்களில் மலை மலையாகக் குவிந்துள்ள பிளாஸ்டிக் குப்பைகள்

வங்கக்கடல் உட்பட உலகில் உள்ள கடல்களில் மொத்தம் 269,000 டன் பிளாஸ்டிக் குப்பைகள் மிதந்து வருவதாக கலிபோர்னியாவிலிருந்து வெளிவரும் ஆய்வறிக்கையில் அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது உலகக் கடல்களில் சுமார் 5.25 டிரில்லியன் பிளாஸ்டிக் துகள் மிதக்கின்றன. இந்தக் கணக்கில் கடற்கரையில் கொட்டப்படும் பிளாஸ்டிக் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் உண்டு முடித்த பிளாஸ்டிக்குகள் சேர்க்கப்படவில்லை.

இந்த பிளாஸ்டிக் துகள்கள் 3 அளவுகளில் உள்ளது: மைக்ரோ பிளாஸ்டிக் (4.75 மி.மீ-க்கு குறைவு) மெசோ பிளாஸ்டிக் (4.75 மி.மீ-200 மிமீ), மற்றும் மேக்ரோ பிளாஸ்டிக் (200 மி.மீ.க்கும் அதிகம்)

ஆனால் 269000 டன் பிளாஸ்டிக் குப்பைகளில் பெரிய அளவு பிளாஸ்டிக் குப்பைகளே அதிகம் உள்ளது. அதாவது 2,33,000 டன் பெரிய அளவு பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் மிதந்து வருகின்றன.

கலிபோர்னியாவின் ஃபைவ் ஜைரஸ் இன்ஸ்டிட்யூட் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை விவரங்கள் இன்று PLOS ONE என்ற இதழில் வெளியாகியுள்ளது.

2007-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டுவரை இந்த ஆய்வுக்குழுவினர் 24 கடல்பயணங்களை மேற்கொண்டனர். வடக்கு மற்றும் தெற்கு பசிபிக் கடல், வட மற்றும் தென் அட்லாண்டிக் கடல், இந்தியப் பெருங்கடல், ஆஸ்திரேலிய கடற்பகுதிகள், வங்கக்கடல், மத்தியதரைக்கடல் ஆகியவற்றில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

38% பிளாஸ்டிக் துகள்களுடனும், 35.8% பிளாஸ்டிக் குப்பைகளுடனும் உலகில் வடக்கு பசிபிப் பெருங்கடல் பெரும் குப்பைக் கடலாக திகழ்ந்து வருகிறது.

இந்தியப் பெருங்கடலிலும் பெரும் பிளாஸ்டிக் குப்பைகள் மிதப்பதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

தங்களது இந்த உத்தேச மதிப்பீடு மிகவும் குறைந்த அளவே என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஓரளவுக்கு மேல்பரப்பை ஆய்வு செய்ததே இவ்வளவு கிடைத்துள்ளது. ஆழ்கடல் பகுதிகளை ஆய்வு செய்தால் மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைக்கலாம் என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

இது கடல்வாழ் உயிரினங்களுக்கு பேராபத்தை விளைவிக்கும், கடல்வாழ் உயிரினங்களை உண்ணும் மனிதர்களுக்கும் இதனால் இனம் புரியாத வியாதிகள் தோன்றும் என்று இவர்கள் எச்சரித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x