Published : 15 Dec 2014 12:13 PM
Last Updated : 15 Dec 2014 12:13 PM
புதிய ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான ‘ஸ்பெக்டர்’ வரும் நவம்பர் மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில், அந்தப் படத்தின் திரைக்கதையை சிலர் திருடியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் கம்ப்யூட்டர்களில் உள்ள தகவல்களை இணையம் வழியாக கடந்த நவம்பர் 24-ம் தேதி சிலர் திருடியுள்ளனர். அந்நிறுவனத்தின் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கை செயலிழக்கச் செய்ததுடன், பணியாளர்கள் மற்றும் திரைப்பட நட்சத்திரங்களுக்கு வழங்கப்பட்ட ஊதிய விவரங்களையும் திருடியுள்ளனர். அதோடு, புதிய ஜேம்ஸ் பாண்ட் படமான ‘ஸ்பெக்டர்’ திரைக்கதையையும் அவர்கள் திருடியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மைக்கேல் ஜி.வில்சன், பார்பரா ஃபிராக்கோலி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “சோனி பிக்சர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவன கம்ப்யூட்டர்களிலிருந்து தகவல்களை திருடியவர்கள், அதிலிருந்த ஸ்பெக்டர் திரைப்படத்துக்கான திரைக்கதையையும் திருடியுள்ளனர். இந்த திரைக்கதையை அவர்கள் விரைவில் ஆன்-லைனில் வெளியிட வாய்ப்புள்ளதாக கருதுகிறோம். இத்திரைக்கதையை பிரிட்டன் பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளோம். எனவே, அதை வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திருட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் படத்தயாரிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அந்நிறுவனத்தைச் சேர்ந்த ராபர்ட் லாஸன் கூறும்போது, படத்தயாரிப்பு பணிகளில் பாதிப்பு ஏதும் இல்லை” என்றார்.
இந்த தகவல் திருட்டின் பின்னணியில் வடகொரியா இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், அந்த குற்றச்சாட்டை வடகொரியா மறுத்துவிட்டது.
அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்பெக்டர் திரைப்படத்தில் ஜேம்ஸ் பாண்டாக டேனியல் கிரெய்க் நடத்து வருகிறார். கிறிஸ்டோப் வால்ட்ஸ், மோனிகா பெல்லுஸி, லியா ஸெய்தவுஸ் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படத்தை இயக்குநர் சாம் மென்டிஸ் இயக்கியுள்ளார். வரும் நவம்பர் 6-ம் தேதி திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT