Published : 21 Dec 2014 01:06 PM
Last Updated : 21 Dec 2014 01:06 PM
இந்த உலகில், மிகச்சிறிய சவப்பெட்டிகளே சுமப்பதற்கு மிகவும் கனமானவை...
தாஜ் முகமது, பாகிஸ்தானின் பெஷாவர் மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய இடுகாட்டில் (ரஹ்மான் பாபா இடுகாடு) பிதாமகனாக இருக்கிறார்.
அன்றைக்கு அவர் மிக பரபரப்பாக, பதற்றமாக இருந்தார். ஒரு சிறு இடைவெளி எடுத்துக்கொண்டு தேநீர் அருந்தும்போது நம்மிடம் பேசினார். அவருக்கு வயது 43. அவரது இரண்டு மகன்களுமே அவருக்கு உதவியாக அதே இடுகாட்டில்தான் பணியில் உள்ளனர். ஒரேநாளில் அதிக அளவில் குழிதோண்டியதால் அவரது உடையில் மணல் படிந்திருந்தது. உடையில் புழுதியும், முகத்தில் கவலையுமாக காட்சியளித்தார்.
அப்போது அவர் பேசியது, "இதுவரை நூறாயிரம் சவங்களை புதைத்துள்ளேன். ஆனால், ஒருபோதும் கண்ணீர் சிந்தியதில்லை. ஏனென்றால் அது விதிமுறைகளுக்கு புரம்பானது. ஆனால், விதிமுறைகளை தகர்த்தெரிந்து இன்று அடக்க முடியாமல் அழுது விசும்பினேன். இன்னும் அழுது கொண்டிருக்கிறேன். காரணம், நான் அடக்கம் செய்தது நூற்றுக்கணக்கான குழந்தைகளை.
"இன்று பெஷாவர் இடுகாட்டுக்கு நல்லடக்கத்திற்காக வரிசையாக வந்து சேர்ந்தன குழந்தைகளின் உடல்கள். (இதைசொல்லும்போதே தாஜ் முகமது கண்களில் இருந்து கண்ணீர் புரண்டோடுகின்றன) என் கைகளால் சின்னச்சிறு குழந்தையின் சடலம் முதல், சற்றே வளர்ந்த குழந்தையின் சடலம்வரை ஒவ்வொன்றாக அடக்கம் செய்தேன்.
அங்கு வந்ததிலேயே மிகச்சிறிய குழந்தையின் சடலத்தை தூக்கும்போது இதுவரை நான் சுமந்திராத அளவு அதீத கனத்தை உணர்ந்தேன். மனதின் கனமும் சேர்ந்து கொண்டதே அதற்குக் காரணம் என இப்போது எனக்கு புரிகிறது.
பொதுவாக சவங்களை புதைப்பவர்கள் கண்ணீர் சிந்தக்கூடாது. ஆனால், நான் விதிமுறைகளை மீறினேன். கட்டுப்படுத்த முடியாமல் கதறினேன். நான் 8 குழந்தைகளுக்கு தகப்பன். என்னால் எப்படி கண்ணீரை கட்டுப்படுத்த முடியும் என நினைக்கிறீர்கள்" என்றார்.
தாஜ் முகமது சராசரியாக 2000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை கூலியாக பெறுகிறார். ஆனால், பெஷாவர் தாக்குதலில் பலியான குழந்தைகளை புதைக்க அவர் பணம் பெறவில்லை.
பெஷாவரில் ராணுவப் பள்ளிக்கூடத்தில் அண்மையில் தெஹ்ரிக் இ தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 132 மாணவர்கள் உள்பட 149 பேர் கொல்லப்பட்டனர்.
-தமிழில்:பாரதி ஆனந்த்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT