Published : 09 Dec 2014 09:52 AM
Last Updated : 09 Dec 2014 09:52 AM

உலக மசாலா: விமானத்தில் பறக்கும் பிச்சைக்காரர்கள்

ஆறு வயது அட்டி ஃபாசெட்க்கு இது கடைசி கிறிஸ்துமஸ். ஆடம்பரப் பரிசுகளையோ, டிஸ்னி வேர்ல்ட்க்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையையோ அவள் வெளிப்படுத்தவில்லை. அட்டி கேட்பதெல்லாம் இந்தக் கிறிஸ்துமஸுக்கு அவளுக்கு ஒரு வாழ்த்து அட்டை மட்டும்தான். மூன்று வயதில் இதுவரை கண்டுபிடிக்க முடியாத ஒரு நோயால் பாதிக்கப்பட்டாள் அட்டி. அவளது வளர்ச்சி அத்தோடு நின்றுவிட்டது. சமீபத்தில் நோய் முற்றிவிட்டது. அவளால் தூங்கவோ, நடக்கவோ முடியவில்லை. இன்னும் சில மாதங்களே அவள் உயிருடன் இருப்பாள் என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டார்கள். அப்பாவும் திடீரென்று மரணமடைந்துவிட்டார். அட்டியும் அவரது அம்மாவும் தனிமையில் போராடிக்கொண்டிருக்கிறார்கள். தன் மகள் இருக்கும் வரை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று பேஸ்புக்கில் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை அனுப்பும்படிக் கோரினார் அம்மா. இதுவரை 1500 வாழ்த்து அட்டைகள் குவிந்துள்ளன. உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் இருந்தும் கூட அட்டிக்கு வாழ்த்து வந்துகொண்டிருக்கிறது. அட்டி தன் நோயின் கடுமையை மறந்து மகிழ்ச்சியுடன் கிறிஸ்துமஸை எதிர்நோக்கி இருக்கிறாள்.

குழந்தையின் சந்தோஷமும் ஆயுளும் நீடிக்கட்டும்…

கேம்ப்ரிட்ஜில் ஜோஷுவா குட்மேன் இடது கை பழக்கமுள்ளவர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறார். 1970ம் ஆண்டிலிருந்து 2014ம் ஆண்டு வரை செய்த ஆய்வில், வலது கை பழக்கமுள்ளவர்களை விட இடது கை பழக்கமுடையவர்கள் 12 சதவிகிதம் வரை குறைவான சம்பளம் பெறுகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார். அமெரிக்க மற்றும் பிரிட்டனில் இருந்து எடுத்த சர்வேக்களின் அடிப்படையில் இவரது ஆய்வு நடைபெற்றிருக்கிறது. வலது கை பழக்கமுடையவர்கள் இடது கை பழக்கமுடையவர்களை விட கல்வியிலும், வேலையிலும் ஆதிக்கம் செலுத்துவதாகச் சொல்கிறார்.

அமெரிக்காவின் ஜனாதிபதியே இடது கை பழக்கமுடையவர்தானே… அப்புறம் எப்படி?

ஜார்ஜியாவில் 4 ஆண்டுகளுக்கு முன்பு மகனைக் காணவில்லை என்று ஒரு தாய் புகார் கொடுத்தார். மகன் காணாமல் போனதிலிருந்து அவரது கணவரும் வீட்டுக்கு வருவதில்லை. தனியாக வசித்து வருகிறார். எவ்வளவு தேடியும் மகனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மகனிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தன் தந்தையால் வீட்டுக்குள்ளே அவன் சிறைவைக்கப்பட்டிருந்த செய்தியைச் சொன்னான். உடனே போலீஸுடன் சென்று, மகனை மீட்டார் தாய். சிறுவனின் அப்பா மற்றும் நான்கு பேர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சே… இப்படியும் சில மனிதர்கள்…

வழி இல்லாதவர்கள்தான் பிச்சை எடுப்பார்கள். ஆனால் சீனாவில் பிச்சை எடுப்பதையே ஒரு தொழிலாகச் செய்து வருகிறார்கள். விலை மதிப்பு மிக்க கைக்கடிகாரம், ஐ போன்களுடன் வலம் வரும் இந்தப் போலி பிச்சைக்காரர்கள் ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்துக்கு விமானத்தில் பறக்கிறார்கள். பிச்சை எடுக்கும்போது மட்டும் கிழிந்த ஆடைகள், பாத்திரங்கள், சோகக் கதைகளுடன் தொழிலைச் செய்துவருகிறார்கள். மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் இந்தத் தொழில் முறை பிச்சைக்காரர்களை போலீஸ் பிடித்திருக்கிறது. சீனாவில் இருக்கும் பிச்சைக்காரர்களில் 82.3 சதவிகிதம் பேர் போலிப் பிச்சைக்காரர்கள் என்று மக்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.​

பாத்திரம் அறிந்து பிச்சை இடு...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x