Published : 09 Dec 2014 09:47 AM
Last Updated : 09 Dec 2014 09:47 AM

அமெரிக்காவின் நடவடிக்கையால் ஆத்திரம்: தென்னாப்பிரிக்க பிணைக் கைதியையும் சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள்

ஏமனில் தங்கள் நாட்டு புகைப்படக்காரரை மீட்க அமெரிக்க ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையால் ஆத்திரமடைந்த அல்-காய்தா தீவிரவாதிகள் தென்னாப்பிரிக்க பிணைக் கைதி ஒருவரையும் சுட்டுக் கொன்றது தெரியவந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஆசிரியர் பெய்ரி கோர்கியும் (54) அவரது மனைவி யோலந்த் கோர்கியும் சுமார் ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு ஏமனில் அல்-காய்தா தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். அவர்களை விடுவிக்க தீவிரவாதிகள்பெருமளவில் பணம் கேட்டனர்.

பணம் கொடுத்து பிணைக் கைதிகளை மீட்க தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்தக்கூடாது என்ற கொள்கையை தென்னாப்பிரிக்கா தீவிரமாக பின்பற்றுகிறது. எனவே தென்னாப்பிரிக்காவை சேர்ந்த சில மக்கள் நல அமைப்புகள் இணைந்து அத்தம்பதியை விடுவிக்க தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்தியது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெருமளவில் பணம் கொடுத்து யோலந்த் கோர்கியை தீவிரவாதிகளிடம் இருந்து விடுவித்தனர்.

இந்நிலையில் யோலந்தின் கணவர் பெய்ரியை மீட்க தொடர்ந்து பேச்சு நடத்தப்பட்டது. அவரை விடுவிக்க 1 கோடியே 20 லட்சம் ரூபாய் தர வேண்டுமென அல்-காய்தா தீவிரவாதிகள் கேட்டனர். பேச்சு நடத்திய மக்கள் நல அமைப்பினர் பணத்துக்கும் ஏற்பாடு செய்தனர். இதையடுத்து பெய்ரி விரைவில் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு பணத்தை பெற்றுக் கொண்டு பெய்ரியை விடுவிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அன்று காலை 6 மணிக்கு ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள பெய்ரியின் மனைவிக்கு உங்கள் கணவர் விரைவில் விடுவிக்கப்பட இருக்கிறார் என்று தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்திய குழுவின் தலைவர் செய்தி அனுப்பினார்.

பெய்ரியை விடுவிக்க பேச்சுவார்த்தை குழுவினர் சென்று கொண்டிருந்த நேரத்தில் தெற்கு ஏமனில் அமெரிக்க புகைப்படக் கலைஞர் லூக் சோமர்ஸை விடுவிக்க அமெரிக்க ராணுவத்தினர் அல்-காய்தா தீவிரவாதிகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த தீவிரவாதிகள் பெய்ரியை சுட்டுக் கொன்றுவிட்டனர். அதே நேரத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். எனினும் அவர்களால் லூக் சோமர்ஸை மீட்க முடியவில்லை. அவரையும் தீவிரவாதிகள் கொன்றுவிட்டனர்.

பெய்ரியை மீட்கச் சென்ற குழுவினர் அவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதை அறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தனர். எனினும் மனதை தேற்றிக் கொண்டு அவரது மனைவிக்கு அத்தகவலை தெரிவித்தனர். காலை 6 மணிக்கு தனது கணவர் திரும்ப வருவார் என்ற நல்ல செய்தியை பெற்ற யோலந்த், அடுத்த இரண்டு மணி நேரத்திலேயே அவர் கொல்லப்பட்டார் என்ற செய்தியைக் கேட்டு பெரும் சோகத்தில் மூழ்கினார்.

பெய்ரி இறந்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க தரப்பு, அப்பகுதியில் பிடித்துவைக்கப்பட்டுள்ள தென்னாப்பிரிக்க பிணைக் கைதியை மீட்க பேச்சு நடத்தப்பட்டு வருகிறது என்ற செய்தி தங்களுக்கு தெரியாது என்று கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x