Published : 18 Dec 2014 09:31 AM
Last Updated : 18 Dec 2014 09:31 AM
ஏமனில் ஷியா பிரிவு தீவிரவாதத் தலைவர் அப்துல்லா இத்ரிஸை குறிவைத்து நடத்தப்பட்ட கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் சிக்கி, அந்த வழியாக வந்த பள்ளிப் பேருந்தில் பயணம் செய்த 15 சிறுமிகள் பலியானார்கள்.
இச்சம்பவத்தில் அப்துல்லா இத்ரிஸ் வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்த மேலும் 10 பேர் உயிரிழந்தனர்.
அரேபிய தீபகற்பத்தில் உள்ள ஏமன் நாட்டின் ராடா பகுதியில் ஷியா பிரிவு தீவிரவாத அமைப் பான ஹவுத்திக்கும், அல் காய்தா தொடர்புடைய சன்னி தீவிரவாத அமைப்புக்கும் இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது.
கடந்த செப்டம்பர் 21-ம்தேதி தலைநகர் சனாவை கைப்பற்றிய ஹவுத்தி அமைப்பினர், நாட்டின் மேற்கு, மத்திய பகுதியில் முன்னேறி வந்தனர். அப்பகுதி களில் அவர்களை தடுத்து நிறுத்த அரேபிய தீபகற்ப அல் காய்தா தீவிரவாத அமைப்பினர் கடுமை யாக போராடி வருகின்றனர்.
கடந்த மாதம் அல் காய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் காசிம் அல் ரிமி பேசும்போது, “ஹவுத்தி அமைப்பினர் மீது கடும் தாக்குதலை நடத்தவுள்ளோம். படுபயங்கரமான நிலையை எதிர்கொள்ள தயாராக இருங்கள்” என்று எச்சரித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, ராடா பகுதியில் இருந்த பழங்குடியின தலைவர் ஒருவரின் வீட்டை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை பய்தா மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹவுத்தி அமைப்பைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர்.
சிறுமிகள் பலி
இந்நிலையில், பய்தா மாகாணம் ராடாவில், நேற்று ஷியா பிரிவு தீவிரவாதத் தலைவர் அப்துல்லா இத்ரிஸை குறிவைத்து அவரின் வீட்டருகே நேற்று இரண்டு கார் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
ஷியா பிரிவின் ஹவுத்தி அமைப்பினர் அமைத்திருந்த சோதனைச் சாவடி அருகே வந்த காரில் இருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது, அதில், அவ்வழியே சென்ற பள்ளிப் பேருந்தில் இருந்த 15 சிறுமிகள் பலியானார்கள். அதைத் தொடர்ந்து சில நிமிடங்களிலேயே அப்துல்லா இத்ரிஸின் வீட்டருகே மற்றொரு காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில், அங்கிருந்த 10 பேர் உயிரிழந்தனர்.
இத்தாக்குதலுக்கு அல் காய்தா தீவிரவாதிகள்தான் காரணம் என்று ஹவுத்தி அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர் பாக ஏமன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “பள்ளிப் பேருந்து மீது நிகழ்த்தப்பட்ட இக்கொடூரத் தாக்குதல் மிகவும் கோழைத்தன மான செயல்” என்று கண்டனம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT