Published : 11 Dec 2014 11:03 AM
Last Updated : 11 Dec 2014 11:03 AM

உலக மசாலா: 35 பேர் மட்டும் இருக்கும் கிராமம்

ஜப்பானில் குழந்தை பிறப்பு குறைந்து வருகிறது. இன்னொரு பக்கம் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல ஜப்பானிய கிராமங்களில் ஆட்களே இல்லை. ஆட்கள் குறைவாக வசிக்கும் இடங்களில் வேலை, மின்சாரம், பள்ளிக்கூடம் போன்றவை தடைபடுகின்றன. அதனால் அங்கு தொடர்ந்து வசிக்க இயலாமல் வேறு இடங்களுக்குச் சென்றுவிடுகிறார்கள். 65 வயது அயானோ தன் அப்பாவைப் பார்ப்பதற்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு வந்தார். அப்பா இறந்துவிட, அங்கேயே தங்கிவிட்டார். அந்தக் கிராமத்தில் இப்போது 35 பேர் மட்டுமே வசிக்கிறார்கள். எங்கும் மயான அமைதி. தானியங்களைப் பறவைகளிடமிருந்து காப்பாற்ற சோளக்கொல்லை பொம்மைகளைச் செய்து வைத்தார்.

அப்பொழுதுதான் அயானோவுக்கு ஒரு யோசனை தோன்றியது. நிறைய பொம்மைகளை உருவாக்கினார். பேருந்து நிறுத்தத்தில் மனிதர்களுக்குப் பதில் பொம்மைகளை உட்கார வைத்தார். பள்ளியில் ஒரு பொம்மை பாடம் நடத்த, சில பொம்மைகள் பெஞ்சில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருக்கின்றன. தேநீர்க் கடைகளில் சில பொம்மைகள் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருக்கின்றன. இங்குள்ள மனிதர்கள் இறந்தாலும் இங்கேயே வசிப்பதாக நம்புகிறார் அயானோ. அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அயானோவின் விஷயத்தைக் கேள்விப்பட்டு, சுற்றிப் பார்க்க வருகிறார்கள். விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்துக்கொள்கிறார்கள்.

ஐயோ, பாவம்! மனிதர்கள் இல்லாத இடங்களில் வசிப்பது எவ்வளவு கஷ்டம்...

சீனாவில் வசிக்கிறார் ஹு ஜுவான். 28 வயதே ஆன ஹு, 70 வயது தோற்றத்துடன் பரிதாபமாகக் காட்சியளிக்கிறார். 11 ஆண்டுகளுக்கு முன்பு முதல் குழந்தையைப் பெற்றெடுத்தார் ஹு. அன்றிலிருந்து அவரது உருவம் மாற்றம் அடைய ஆரம்பித்தது. ஆறு மாதங்களில் முற்றிலும் புதிய உருவமாக மாறிப்போனார் ஹு. உலகிலேயே அபூர்வமான தசை நோயால் பாதிக்கப்பட்டிருந்த விஷயம் தெரியவந்தது. பார்க்காத மருத்துவம் இல்லை. ஹுவின் முகமும், கழுத்தும் மட்டுமே முதிய தோற்றத்தைத் தந்திருக்கிறது.

மற்றபடி உடல் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதாகச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். கண்ணாடி பார்ப்பதையும் வெளியில் செல்வதையும் தவிர்த்தார் ஹு. அவரது மகன் வெறுக்க ஆரம்பித்தவுடன் வாழ வேண்டாம் என்ற முடிவுக்கு ஹு வந்தபோது, அவரது கணவர் அன்பாகவும், அதரவாகவும் இருந்து அந்த எண்ணத்தை மாற்றினார். ஒரு குழந்தை பிறப்பில் ஏற்பட்ட இந்தப் பாதிப்பு, இன்னொரு குழந்தை பிறக்கும்போது மறையலாம் என்ற எண்ணத்தில் 2-வது குழந்தையைப் பெற்றெடுத்தனர். ஆனால் முகத்தில் எந்த மாற்றமும் நிகழவில்லை.

நோய் பாதிப்பை விட சுற்றியுள்ளவர்களின் புறக்கணிப்பு கொடுமையானது…

முழுக்க முழுக்க 24 கேரட் தங்கத்தில் ஒரு சைக்கிள் உருவாக்கப்பட்டிருக்கிறது. கோல்ட்ஜெனி கம்பெனி சமீபத்தில் ஸ்மார்ட் போன்களைத் தங்கத்தில் உருவாக்கி விற்பனை செய்தது. தற்போது தங்க சைக்கிளை உருவாக்கியிருக்கிறது. இந்த சைக்கிளின் மதிப்பு சுமார் 2 கோடியே 43 லட்சம்! இந்த விலைக்கு உலகின் மிக உயர்ந்த சூப்பர் காரை வாங்கிவிடலாம். சைக்கிளின் சில பகுதிகளில் வைரக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இரவில் தங்கமும் வைரமும் ஜொலிக்கின்றன.

பத்திரமா ஓட்டிட்டுப் போக முடியுமா?

சமீபத்தில் பெர்லினில் நறுமணம் மிக்க துணிகள் விற்பனைக்கு வந்தன. வென்னிலா, டார்க் சாக்லெட், பழங்கள் போன்ற நறுமணங்களில் இந்தத் துணிகள் விற்கப்படுகின்றன. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஒரு பல்கலைக்கழகத்தில் ஜானி வாக்கர் என்ற பிரபல விஸ்கியின் நறுமணத்தைச் சேர்த்து துணிகளை உருவாக்கியிருக்கிறார்கள். ஜெர்மனி, க்ரீஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளில் முதல் கட்டமாக விற்பனைக்கு வருகிறது.

குடிச்சிட்டு வர்றவங்க பக்கத்தில் நிற்கவே முடியாது… இதுல மது வாடை துணியை வேற போட்டுட்டு அலையணுமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x