Published : 30 Nov 2014 01:19 PM
Last Updated : 30 Nov 2014 01:19 PM

உலக மசாலா: மூவி போஸ்டர்ஸ் ஓவியம்

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கானா நாட்டில் ‘கோல்டன் ஏஜ் மூவி போஸ்டர்ஸ்’ என்ற பெயரில் ஓவியங்கள் அமோகமாக விற்பனையாகி வருகின்றன. 1980 1990களில் வெளிவந்துள்ள ஹாலிவுட் படங்களின் போஸ்டர் கள், கைகளால் வரையப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு போஸ்டர் சுமார் 1 லட்சத் திலிருந்து 2 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகிறது. பழைய ஹாலிவுட் படங்களின் விசிறி கள் எவ்வளவு பணம் கொடுத்து வேண்டுமானாலும் இந்த போஸ்டர்களை வாங்கத் தயாராக இருக்கிறார்கள். போஸ்டர் ஓவியர்களில் ஒருவரான 39 வயது ஜீயர்ஸ் ஒகா அஃபுடு 14 வயதிலிருந்தே இதுபோன்ற போஸ்டர் ஓவியங்களை வரைய ஆரம்பித்துவிட்டார். பழைய படங்களின் டிவிடிகளை வாங்கி வந்து, பார்த்து, ஆங்காங்கே ஒன்றிரண்டு விஷயங்களைச் சேர்த்து ஓவியங்களைத் தீட்டி விடுகிறார். அந்தக் காலத்து போஸ்டர்களை இப்போது பார்ப்பது போல அத்தனை நேர்த்தியாக இருக்கின்றன இந்த ஓவியங்கள்.

அட! புதுமையான தொழிலா இருக்கே…

ஆப்பிரிக்காவில் இருக்கும் மொராக்கோ நாட்டில் லிட்டில் ஸ்விட்சர்லாந்து இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? இஃப்ரான் மொராக்கோவின் மிகச் சிறிய நகரம். பனிப் போர்த்திய இந்த நகரம், ஸ்விட்சர்லாந்தைப் போலவே உருவாக்கப்பட்டிருக்கிறது. உயரமான சிவப்பு கூரை கொண்ட கட்டிடங்கள், செடார், ஓக் மரங்கள் என்று ஸ்விட்சர்லாந்தில் வசிக்கும் உணவர்வைத் தருகிறது இஃப்ரான். ஆண்டு முழுவதும் இந்த நகரை நோக்கி மக்கள் படையெடுத்த வண்ணம் இருக்கிறார்கள்.

ஆப்பிரிக்காவில் ஐரோப்பா!

உலகமெங்கும் வெற்றியைக் கொண்டாடுவார்கள். ஆனால் தோல்வியை? ஸ்காட்லாந்தில் உள்ள ஃபெட்டஸ் கல்லூரியில் ‘தோல்வி வாரம்’ கொண்டாடப்பட்டது. படிப்பு, விளையாட்டு… எந்தத் துறையாக இருந்தாலும் இன்று மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனால் அவர்கள் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். தோல்வியடைந்தவர்கள் தங்களைக் குறித்து பயமோ, அவமானமோ கொள்ளத் தேவையில்லை என்பதை வலியுறுத்தவும், அவர்கள் தோல்வியில் இருந்து எவ்வாறு வெற்றியை நோக்கிச் செல்ல முடியும் என்பதைப் புரிய வைக்கவும் இந்தத் தோல்வி வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தோல்வியில் இருந்து வெற்றியை எட்டிப் பிடித்த கண்டுபிடிப்பாளர்கள், ஓவியர்கள், எழுத்தாளர்கள், தொழிலதிபர்கள் போன்றவர்களின் வாழ்க்கை சுவாரசியமாக எடுத்துச் சொல்லப்பட்டது. நூற்றுக்கணக்கான தடவைகளில் இருந்து ஆயிரக்கணக்கான தடவைகள் வரை தோல்வியடைந்து வெற்றியை ருசித்தவர்கள் இருக்கிறார்கள் என்பதை அழகாக இந்த வாரம் மாணவர்களுக்கு எடுத்துச் சொன்னது. மாணவர்கள் மிகுந்த தன்னம்பிக்கையோடு இங்கிருந்து சென்றது கண்டு, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மகிழ்கிறார்கள்.

இங்கேயும் 'தோல்வி வாரம்' கொண்டாடலாம்!

பிரேஸிலில் ஒரு வித்தியாசமான கண்காட்சியை நடத்தியிருக்கிறார் ஹிர்ஸ்ட். மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் கத்தி, பிளேடு, ஊசி, கத்திரி, ஊக்கு போன்றவற்றை வைத்து நகரங்களின் மாதிரிகளைப் பறவைக் கோணத்தில் இருந்து பார்க்கும்படி வடிவமைத்திருக்கிறார். ரோம், வாட்டிகன், பெய்ஜிங், மாஸ்கோ, லண்டன், நியு யார் உட்பட 17 நகரங்களின் மாதிரிகளை இந்தக் கருவிகளை வைத்து உருவாக்கி அசத்தியிருக்கிறார். புகைப்படத்திலோ, தூரத்திலோ இருந்து பார்த்தால் கருவிகளால் வடிவமைக்கப்பட்ட மாதிரிகள் என்பது தெரியாது. ஏராளமான பொறுமையும் அபாரமான கற்பனையும் இருந்தால் மட்டுமே இந்த ‘மாதிரி நகரங்கள்’ சாத்தியம்!

அட்டகாசம் ஹிர்ஸ்ட்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x