Published : 27 Nov 2014 09:59 AM
Last Updated : 27 Nov 2014 09:59 AM

உலக மசாலா: தீவை வாங்கிய டாக்ஸி டிரைவர் மகன்

‘என் தந்தை ஒரு டாக்ஸி டிரைவர். ஆனால் நான் ஒரு நாட்டின் அரசன்’ என்கிறார் ரெனாடோ பர்ரோஸ். போர்ச்சுகல் நாட்டுக்குச் சொந்தமான மடீரியா தீவுக்கருகில் ஒரு சின்ன தீவை விலைக்கு வாங்கியிருக்கிறார் ரெனாடோ. பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் இந்தத் தீவை விற்க இருப்பதாகச் சொன்னவுடன் பலரிடமும் கடன் கேட்டுப் பார்த்தார் ரெனாடோ. ஒரு பெரிய பாறையாகக் காட்சியளித்த அந்தப் பகுதியை வாங்குவது முட்டாள்தனமான முடிவு என்றார்கள். சேமிப்பை எல்லாம் திரட்டி, இறுதியில் தீவை வாங்கிவிட்டார் ரெனாடோ. ஓர் அறை கொண்ட சிறிய வீடு அந்தத் தீவில் இருக்கிறது. ரெனாடோ, மனைவி, மகன், மகள் நால்வரும் அங்கே வசிக்கிறார்கள்.

மின்சாரத்துக்கு சூரிய சக்தியைப் பயன்படுத்திக்கொள்கிறார். அந்தத் தீவின் அரசர், போலீஸ், தோட்டக்காரர் என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் ரெனாடோ, ஓர் ஆசிரியர். ‘நானே என் நாட்டுக்குத் தேசிய கீதம் இயற்றுவேன். நினைத்தால் மாற்றுவேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறத்தில் கொடிகளைப் பறக்க விடுவேன். அத்தனை அதிகாரமும் என்னிடம் இருக்கிறது. இங்கே சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். யாரிடமும் பணம் வசூலிப்பதில்லை’ என்று சொல்லும் ரெனாடோவின் குடும்பம் இங்கு நிரந்தரமாக வசிப்பதில்லை. ரெனாடோ மட்டுமே வசிக்கிறார்.

ம்… ஆளும் ஆசை யாரை விட்டது?

ஷேக்ஸ்பியர் எழுதிய நகைச்சுவை, வரலாறு, துன்பியல் படைப்புகள் அனைத்தும் 1623-ம் ஆண்டு முதல் பதிப்பாக வெளியிடப்பட்டிருக்கின்றன. 400 வருட பழைமையான ஷேக்ஸ்பியரின் இந்தப் படைப்புகள் பிரான்ஸில் உள்ள நூலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இன்று இந்தப் புத்தகங்களின் மதிப்பு சுமார் ரூ.38 கோடிகள். 750 பதிப்புகளைத் தாண்டி ஷேக்ஸ்பியரின் படைப்புகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இதுவரை 228-வது பதிப்புதான் பழைய பதிப்பாக உலகில் கருதப்பட்டு வந்தது. இன்று முதல் பதிப்பே கிடைத்ததில் எல்லோரும் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்.

ஷேக்ஸ்பியர் படைப்புகள் விலை மதிப்பிட முடியாத அற்புதப் பொக்கிஷங்கள்!

கனடாவைச் சேர்ந்த நாவலாசிரியரும் ஓவியருமான டக்ளஸ் கப்லாண்ட் ஒரு வித்தியாசமான வண்ணமயமான சிலையை உருவாக்கியிருக்கிறார். 7 அடி உயரம் கொண்ட உடையாத கண்ணாடியால் ஆன இந்தச் சிலை சாலையில் வைக்கப்பட்டது. சிலையின் ஒவ்வோர் அங்குலமும் பல வண்ண சூவிங்கம் கொண்டு ஒட்டப்பட்டது. முழு உருவமும் ஒட்டப்பட்ட பிறகு அப்படியே கொளுத்தும் வெயிலில் வைக்கப்பட்டது சிலை. வெயிலுக்கு சூயிங்கம் உருகி, வித்தியாசமான சிலையாக மாறியது. குளவிகளும் பூச்சிகளும் இனிப்புச் சுவையை நோக்கிப் படையெடுத்தன. ’நான் நினைத்தது போலவே அசிங்கமும் அழகும் நிறைந்த சிலையாக மாறிவிட்டது. என் திறமைக்குக் கிடைத்த வெற்றி’ என்கிறார் டக்ளஸ். இந்தச் சிலையில் இருக்கும் உருவம் இவருடையதுதான்!

விசித்திரமான மனிதர்கள்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x