Last Updated : 12 Nov, 2014 10:30 AM

 

Published : 12 Nov 2014 10:30 AM
Last Updated : 12 Nov 2014 10:30 AM

அமெரிக்க தொழிலதிபர் விவாகரத்து வழக்கு: மனைவிக்கு ரூ.6 ஆயிரம் கோடி வழங்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அமெரிக்க தொழிலதிபரின் விவாகரத்து வழக்கில் மனைவிக்கு ரூ.6 ஆயிரம் கோடி வழங்க வேண்டுமென்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அமெரிக்க வரலாற்றிலேயே விவாகரத்து வழக்கில் கணவர் தனது முன்னாள் மனைவிக்கு கொடுக்கும் அதிகபட்ச ஈட்டுத் தொகை இதுவாகும். இப்பணத்தை பெறும்போது அப்பெண் அமெரிக்காவின் முதல் 100 பணக்கார பெண்களில் ஒருவராக இருப்பார்.

அமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான கான்டினென்டல் ரிசோர்சஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஹெரால்ட் ஹாமின் (68) தனது மனைவி சூ அன்னிடம் (58) இருந்து விவாகரத்து கோரி ஒக்லஹாமா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சுமார் 9 வாரங்கள் நடைபெற்ற வழக்கு விசாரணைக்குப் பிறகு நீதிமன்றம் நேற்றுமுன்தினம் 80 பக்க தீர்ப்பை வழங்கியது. எனினும் ரூ.6 ஆயிரம் கோடி என்பது விவாகரத்துக்காக அன் தரப்பில் கேட்கப்பட்ட தொகையைவிட மிகவும் குறைவுதான்.

கான்டினென்டல் எண்ணெய் நிறுவனத்தில் ஹெரால்டுக்கு 68 சதவீத பங்கு உள்ளது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் கோடியாகும். இதில் பாதி பங்குகளை தனக்கு அளிக்க வேண்டுமென்று அன் கேட்டிருந்தார். எனினும் ரூ.6 ஆயிரம் கோடியை அவருக்கு வழங்கினால் போதும் என்று நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த விவாகரத்து வழக்கால் கான்டினென்டல் எண்ணெய் நிறுவனம் பெரும் நெருக்கடிக்கு உள்ளானது. ஏனெனில் அன் கேட்டபடி நிறுவனத்தின் பாதி பங்குகள் அவருக்கு அளிக்கப்பட்டால், அது நிறுவனத்தின் நிர்வாகத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருந்தது. இதனால் அமெரிக்க பங்குச் சந்தையில் கான்டினென்டல் நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.

இப்போது விவாகரத்து செய்துள்ள சூ அன், ஹெரால்டின் இரண்டாவது மனைவி ஆவார். தனது முதல் மனைவி ஜூடித்தை 1987-ம் ஆண்டு ஹெரால்ட் விவாகரத்து செய்தார். சூ அன்னை 1988-ம் ஆண்டு திருமணம் செய்தார். கான்டினென்டல் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பையும் வகித்து வந்தார்.

அமெரிக்காவில் மிகப்பெரிய சூதாட்ட நிறுவனங்களை நடத்தி வரும் ஸ்டீவ் வெயன் 2010-ம் ஆண்டில் தனது மனைவியை விவாகரத்து செய்ய சுமார் ரூ.450 கோடி வழங்கினார். இதுவே விவாகரத்து வழக்கில் மனைவிக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச ஈட்டுத் தொகையாக இருந்தது. ஆனால் இப்போதைய புதிய தீர்ப்பு விவாகரத்து வழக்கில் மனைவிக்கு வழங்கப்படும் தொகையில் சாதனையை படைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x