Published : 15 Nov 2014 09:49 AM
Last Updated : 15 Nov 2014 09:49 AM

உலக மசாலா - உடல் முழுவதும் நகம்

அமெரிக்காவில் உள்ள பால்டிமோர் பகுதியில் வசிக்கிறார் 32 வயது ஷானைனா இசோம். கடந்த ஐந்து ஆண்டு களாக வித்தியாசமான நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். தோலில் முடிகள் முளைக்க வேண்டிய இடங்களில் எல்லாம் நகங்கள் முளைத்துள்ளன. இந்த நோய்க்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆஸ்துமாவுக்காக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றபோது, அளவுக்கு அதிகமான ஸ்டீராய்ட் மருத்துகள் கொடுக்கப்பட் டிருக்கின்றன. அது அலர்ஜியாக மாறி, தோலில் கடுமையான அரிப்பை உண்டாக்கியிருக்கிறது. அரிப்பைத் தடுக்க மேலும் சில மருந்துகள் கொடுக்கப்பட்டபோது, நிலைமை இன்னும் மோசமாகி விட்டது.

முடிகளுக்குப் பதிலாக நகங்கள் உடல் முழுவதும் முளைத்துவிட்டன. கால்கள் இரண்டும் கறுப்பாகிவிட்டன. அவரது பார்க்கும் திறன் குறைந்துவிட்டது. எலும்புகள் வலுவிழந்துவிட்டன. உடல் எடையும் வேகமாகக் குறைந்து வருகிறது. மருத்துவச் செலவு அதிகமாகிக் கொண்டே செல்கிறது. ஒரு மில்லியன் டாலர் மருத்துவமனைக்குக் கொடுக்க வேண்டியிருக்கிறது. மாதத்துக்கு 25 ஆயிரம் டாலர் செலவாகிறது. மகளுக்காக வேலையைவிட்டுவிட்ட அவரது அம்மாவால் சமாளிக்க இயலவில்லை. ஷானைனாவுக்காக நிதி திரட்டி வருகிறார்கள். ஆனால் அந்த நிதியை விட மருத்துவச் செலவு அதிகமாகிறது என்பதுதான் வருத்தமான விஷயம்.

நோய்க்கு வைத்தியம் பார்க்கப் போன இடத்தில் புதுசா இப்படி ஒரு நோயா… கொடுமைதான்.

பெல்ஜியத்தைச் சேர்ந்த ஹெலேன் ஹோயோஸ், திபட் கில்க்வின் இருவரும் புதிய வகை பாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தப் பாத்திரத்தைச் சுத்தம் செய்து, மீண்டும் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. உணவைப் பாத்திரத்தில் வைத்து, அப்படியே பாத்திரத்தையும் சேர்த்துக் கடித்துச் சாப்பிட வேண்டியதுதான். உருளைக் கிழங்கு, தண்ணீர், எண்ணெய் சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாத்திரங்கள் எளிதாக ஜீரணமாகக்கூடியவை. சின்னச் சின்னப் பாத்திரங் களைத்தான் தற்போது உருவாக்கியிருக்கிறார்கள். எதிர்காலத்தில் பெரிய பாத்திரங்கள், தண்ணீர் டம்ளர்கள் எல்லாம் உருவாக்கும் திட்டம் இருக்கிறது என்கிறார்கள்.

புதுமையான ஐடியாதான்… ஆனால் மளிகை சாமான்கள் வாங்கும்போது 500 தம்ளர், 300 தட்டுனு வாங்க முடியுமா என்ன!

புளோரிடாவில் 40 வயது ரூபி க்ரவ்பெராவுக்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தது. மிகவும் சிக்கலான இந்த ஆபரேசனுக்குப் பிறகு ரூபியின் நாடித்துடிப்பு படிப்படியாகக் குறைந்து நின்றுவிட்டது. டாக்டர்கள் குழு பரிசோதித்த பிறகு, ரூபியின் உறவினர்களை அழைத்து இறந்துபோன விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். சந்தோஷமான தருணம் துக்கமாக மாறிய அதிர்ச்சியில் எல்லோரும் இருந்திருக்கிறார்கள். திடீரென்று ரூபியின் இதயம் துடிக்க ஆரம்பித்தது. மருத்துவர்கள் தொடர்ந்து மருந்துகளைச் செலுத்த, ரூபி பிழைத்துக்கொண்டார்! நாடித்துடிப்பு நின்று 45 நிமிடங்களுக்குப் பிறகு ரூபி பிழைத்ததில் மருத்துவர்களுக்கே ஆச்சரியமாக இருக்கிறது!

மரணத்தைத் தொட்டுத் திரும்பிய ரூபிக்கு வாழ்த்துகள்!

சூரிய சக்தி மூலம் இயங்கும் இரண்டு சக்கர வாகனங்களுக்கான சாலை நெதர்லாந்தில் போடப்பட்டிருக்கிறது. உலகின் முதல் சூரிய சக்திக்கான சாலையாக இது இருக்கிறது. இந்தச் சாலையில் வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது வாகனங்களுக்கான சூரிய சக்தி கிடைக்கிறது. வீடு, தெரு விளக்கு, டிராபிக் விளக்குகள் போன்றவற்றில் பயன்பட்டுவந்த சூரிய சக்தி, இனி இரண்டு சக்கர வாகனங்களுக்கும் பயன்பட இருக்கிறது. எரிபொருள் பற்றாக்குறை, எரிபொருள் மாசு போன்றவற்றில் இருந்து உலகத்தைக் காக்க இந்தச் சூரிய சக்தி மிகவும் இன்றியமையாதது.

வருடத்தின் பெரும்பகுதி வெயில் வாட்டும் நம்ம நாட்டுக்குத்தான் முதலில் இந்தத் திட்டம் கொண்டு வரணும்…



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x