Published : 01 Nov 2014 09:45 AM
Last Updated : 01 Nov 2014 09:45 AM

உலக மசாலா: எலும்புகூடுகளில் ரசனையா?

ஆஸ்திரேலியாவின் நியுசவுத்வேல்ஸில் உள்ள கியோஸ்க் காபி கடை வித்தியாசமான விலைப் பட்டியலை வைத்திருக்கிறது. இங்கு ஒரே காபி, விதவிதமான விலைகளில் கிடைக்கிறது. எப்படி? ‘ஒரு காபி’ என்றால் 5 டாலர். ‘ஒரு காபி ப்ளீஸ்’ என்றால் 4.50 டாலர். ’குட்மார்னிங், ஒரு காபி ப்ளீஸ்’ என்றால் 4 டாலர். சக மனிதர்களை மதிக்கும் பண்பு குறைந்து வருவதால், இப்படி விலைப்பட்டியலை எழுதி வாசலில் வைத்திருப்பதாகச் சொல்கிறார் கடையின் சொந்தக்காரர் கேவ் சில்வர். உண்மையிலேயே இந்த யோசனை வெற்றி பெற்றுவிட்டது. விலைப்பட்டியலைப் பார்க்கும் பெரும்பாலானவர்கள் சொல்வது, ’குட் மார்னிங், ஒரு காபி ப்ளீஸ்’ என்பதைத்தான். ப்ளீஸ், தாங்க் யூ என்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தினால், நம்மை உச்சத்துக்கு கொண்டு சென்றுவிடும் என்கிறார் சில்வர்.

மனுசனுக்கு இருக்க வேண்டிய இயல்பான பண்பைக் கூட, காசைக் காட்டித்தான் கொண்டு வர வேண்டியிருக்கு..

அமெரிக்காவில் வசிக்கும் லேண்டன் ஜோன்ஸ் 12 வயது சிறுவன். கடந்த ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி இரவு ஒரு முழு பிட்ஸாவையும் ஐஸ்க்ரீமையும் சாப்பிட்டான். தூங்கி விழித்தபோது மிகவும் சோர்வாக இருந்தான். அத்துடன் பசி, தாகம் என்ற இரண்டு உணர்வுகளையும் இழந்திருந்தான். சிரிப்பும் துறுதுறுப்புமாக இருக்கும் லேண்டன் முற்றிலும் புதிய மனிதனாக மாறியிருந்தான். அவனுடைய பெற்றோர் பார்க்காத மருத்துவம் இல்லை. ஆனாலும் மருத்துவ உலகுக்கே அவனது நோய் பெரிய சவாலாக இருக்கிறது. ஓராண்டு ஆகியும் அவனது உடல்நிலை முன்னேறவில்லை. கட்டாயப்படுத்திக் கொடுத்தாலும் ஒரு வாய்க்கு மேல் அவனால் சாப்பிட முடிவதில்லை. இதனால் 47 கிலோவிலிருந்து 30 கிலோவாகக் குறைந்துவிட்டான். சமீபத்தில் எடை இழப்பு மிக அதிகமாகி வருகிறது. இன்றைய மருத்துவம் தன் மகனைக் குணப்படுத்தி விடும் நம்பிக்கையில் ஒவ்வொரு மருத்துவமனையாக அலைந்துகொண்டிருக்கிறார்கள் லேண்டனின் பெற்றோர்.

ஐயோ பாவம்.. மருத்துவ உலகமே ஏதாவது செய்து லேண்டனைக் காப்பாத்துங்க..

சவுத் கரோலினாவில் வசிக்கும் ஸ்டீவ் மில்லரும் ட்ராசி ஆடம்ஸும் கிராஃபிக் டிசைனர்கள். மனித, மிருக எலும்புக்கூடுகள் விற்கும் கடையை நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் குளிர் அதிகமாக இருந்ததால், வாசலில் இருந்த எலும்புக்கூடுகளை நகர்த்தி, வேறு விதமாக வைத்தனர். அதைக் கண்டவர்கள், தினமும் விதவிதமாக எலும்புக்கூடுகளை அமைக்குமாறு யோசனை கூறினர். யோசனை பிடித்துவிடவே, பிக்னிக், ஐஸ் க்ரீம் பார்லர், படகு சவாரி போன்ற தீம்களில் எலும்புக்கூடுகளை அலங்கரித்து வைக்கிறார்கள். எலும்புக்கூடுகளை இத்தனை ரசிப்புக்குரிய ஒன்றாக மாற்றிய மில்லரையும் ட்ராசியையும் பாராட்டாதவர்களே இல்லை! இவ்வளவுக்கும் ஆண் எலும்புக்கூடு தலையில் தொப்பி, காலில் ஷூ, பெண் எலும்புக்கூடு கழுத்தில் ஒரு துணி என்று மிகவும் குறைவான பொருள்களை வைத்து வித்தியாசம் காட்டி அசத்தி விடுகிறார்கள்!

அடடா! அழகான கற்பனை!

கோல்ட்ஃபிஷின் தாயகம் சீனா. அங்கிருந்துதான் ஜப்பான், சிங்கப்பூர் போன்ற மற்ற நாடுகளுக்கு கோல்ட்ஃபிஷ் பரவியது. அழகான, விதவிதமான கோல்ட்ஃபிஷ்கள் இருப்பதால், மிஸ் கோல்ட்ஃபிஷ் போட்டி ஃப்யுஜியான் மாகாணத்தில் நடத்தப்பட்டது. சுமார் 10 ஆயிரம் கோல்ட்ஃபிஷ்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டன. இவற்றிலிருந்து நிறம், உருவம், நீந்தும் வேகம் போன்றவற்றை வைத்து இறுதியில் ஒரு மீனுக்கு மிஸ் கோல்ட்ஃபிஷ் பட்டம் சூட்டப்பட்டது. கோல்ட்ஃபிஷ் பிசினஸ் மிகவும் வருமானம் தரும் தொழிலாகச் சீனாவில் இருந்து வருகிறது. சில அரிய கோல்ட்ஃபிஷ்கள் லட்சம் ரூபாய்க்குக்கூட விற்பனை செய்யப்படுகின்றன!

கோல்ட்ஃபிஷ்கள் வளர்த்தால் கோடீஸ்வரர் ஆகலாமோ…?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x