Last Updated : 18 Aug, 2017 10:03 AM

 

Published : 18 Aug 2017 10:03 AM
Last Updated : 18 Aug 2017 10:03 AM

வெனிசுலா சிறையில் கலவரம்: 37 கைதிகள் பரிதாப பலி

வெனிசுலா நாட்டுச் சிறையில் கைதிகளுக்குள் ஏற்பட்ட பயங்கர மோதலில், 37 கைதிகள் பரிதாபமாக இறந்தனர். சிறை காவலர்கள் 14 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வெனிசுலா நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ளது அமாசோனாஸ் மாகாணம். இங்குள்ள பியூர்டோ அயாகுச்சோ என்ற நகரில் சிறை ஒன்று உள்ளது. இங்கு கடந்த செவ்வாய்க்கிழமை இருதரப்பு கைதிகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. மறுநாள் புதன்கிழமை அதிகாலை வரை பயங்கர கலவரம் நடந்தது. இதில் 37 கைதிகள் பரிதாபமாக இறந்தனர்.

கலவரத்தை அடக்க முயற்சித்த சிறைக் காவலர்கள் மீதும் தாக்குதல் நடந்தது. இதில் 14 காவலர்கள் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து கவர்னர் லிபோரியோ கருல்லா ட்விட்டர் பக்கத்தில், ‘‘கலவரம் நடந்த போது சிறையில்ல 105 கைதிகள் இருந்துள்ளனர். சிறையில் 35 கைதிகளின் சடலங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

சிறையைக் கண்காணிக்க 2 குழுக்கள் உள்ளன. இவற்றில் ‘விண்டோஸ் பார் பிரீடம்’ என்ற குழுவைச் சேர்ந்த கார்லோஸ் நீட்டோ கூறும்போது, ‘‘சிறையில் மிக மோசமான கலவரம் ஏற்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களை இந்தச் சிறையில் 48 மணி நேரத்துக்குத்தான் வைத்திருக்க வேண்டும். ஆனால், பல கைதிகள் பல ஆண்டுகளாக உள்ளனர்’’ என்றார்.

கடந்த 2013-ம் ஆண்டு லாரா மாகாணம் யுரிபனா நகரில் உள்ள சிறையில் பயங்கர கலவரம் ஏற்பட்டது. அப்போது 60 கைதிகள் பலியாயினர். 150 பேர் படுகாயம் அடைந்தனர். அதன்பின்னர் தற்போது சிறை கலவரத்தில் 37 பேர் பலியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x