Published : 06 Nov 2014 11:54 AM
Last Updated : 06 Nov 2014 11:54 AM
அமெரிக்க செனட் தேர்தலில் அதிபர் ஒபாமாவின் ஜனநாயக கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், குடியரசுக் கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து தனது ஆட்சியை நடத்தப் போவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் தேர்தலில் அதிபர் ஒபாமாவின் ஆட்சிக்கும் அவரது ஜனநாயக கட்சிக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அதிகாரம் மிக்க செனட் அவையில் இனி குடியரசு கட்சியின் உறுப்பினர்களின் ஆதரவோடு தனது அனைத்து நடவடிக்கைகளையும் ஒபாமா நிறைவேற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவை, செனட் அவை, மாகானங்களின் கவர்னர் பதவிக்கு செவ்வாய்கிழமை தேர்தல் நடைபெற்றது.
பிரதிநிதிகள் அவையின் அனைத்து உறுப்பினர் பதவிகளுக்கும் (435), செனட் அவையின் சுமார் 3-ல் 1 பங்கு இடங்களுக்கும் (36) இத் தேர்தல் நடைபெற்றது. (புதன்கிழமை) நேற்று வெளியான தேர்தல் முடிவில், குடியரசுக் கட்சி ஏற்கனவே தங்களிடம் இருந்த இடங்களை தக்க வைத்ததுடன், ஜனநாயக கட்சி உறுப்பினர்களின் இடங்களையும் கைப்பற்றி உள்ளது.
இதனால், அமெரிக்க நாடாளுமன்றத்தில் செனட் உறுப்பினர்களின் ஆதரவோடு இயங்க கூடிய ஆட்சியை ஒபாமா நடத்த உள்ளார். செனட்டுக்கு சுழற்சி முறையில் நடைபெறும் தேர்தலில், இதுவே முதல் தேர்தல் ஆகும்.
மேலும், இந்த தேர்தல் முடிவுகள், வரும் 2016-ஆம் ஆண்டு நடக்க இருக்கும் அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்க அதிக வாய்ப்பு உண்டு.
இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வந்த அடுத்து சில நிமிடங்களில் ஊடகங்கள் வாயிலாக அமெரிக்க மக்களிடம் உரையாற்றிய அதிபர் ஒபாமா, "குடியரசு உறுப்பினர்களுக்கு அதிக அதிகாரத்தை அமெரிக்க மக்கள் வழங்கி உள்ளனர் என்பதை முடிவுகளின் மூலம் தெரிந்து கொண்டேன். இனி செனட் அவை குடியரசு உறுப்பினர்களின் பெரும்பான்மையோடு அமெரிக்க மக்களுக்காக இயங்கும்.
அவர்களது கருத்துக்களோடு ஆட்சியை நடத்த நான் ஆவலுடன் இருக்கிறேன். இன்றைய இரவு குடியரசுக் கட்சிக்கு இனிமையான இரவு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ள சாலைகள், மேம்பாலங்கள் ஏனைய வசதி மற்றும் வர்த்தக விரிவாக்கத்திற்கான திட்டங்கள் அனைத்தும் அவை உறுப்பினர்களின் வழிகாட்டுதலோடு நடைபெறும்.
செனட் அவையின் பெரும்பான்மையை நிரூபித்துள்ள குடியரசுக் கட்சியின் சார்பில் செனட் தலைவர் மிட்ச் மெக்கோனல் தனது பொறுப்பை வரும் ஜனவரி மாதம் ஏற்பார்.
அத்துடன் ஏற்கெனவே முடிவான சில கோப்புகள் உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமலும் நிறைவேற்றப்படலாம். இந்த கோப்புகள் கையெழுத்தாக உறுப்பினர்களுக்கு விரும்பமாட்டார்கள் என்றாலும், இவை நிறைவேற்றப்படும்" என்றார்.
முன்னதாக பெரும்பான்மை பெற்ற குடியரசுக் கட்சியின் மிட்ச் மெக்கோனல், அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசினார். அப்போது வரி மசோதாவை திருத்தி அமைப்பது தொடர்பாக அவரிடம் விவாதித்ததாக செய்தியாளர்களிடம் கூறினார். புதிய செனட் உறுப்பினர்களுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா வரும் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்த உள்ளார்.
ஜனநாயக கட்சிக்கும் அதிபர் ஒபாமாவும் தற்போது அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு அவரது அரசியல் போக்கு, குடியுரிமை திட்ட மசோதா மற்றும் வெளியுறவு கொள்கைகளே காரணமாக கருதப்படுகிறது.
மேலும், சிரியா, இராக் நாடுகளில் அமெரிக்கா மேற்கொள்ளும் தாக்குதலுக்கு நிகரான எதிர்வினையை அந்த நாடு எதிர்கொள்ள நேரிடம் என்ற அச்சத்தாலும் இத்தகைய மாற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT