Published : 20 Aug 2017 12:31 PM
Last Updated : 20 Aug 2017 12:31 PM
பின்லாந்து நாட்டில் 18 வயது தீவிரவாதி திடீரென பொதுமக்களை கத்தியால் குத்தியதில் 2 பேர் பலியாயினர். எட்டு பேர் படுகாயம் அடைந்தனர். அவனை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வடக்கு ஐரோப்பிய நாடான பின்லாந்தின் தலைநகர் ஹெல்சின்கியில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ளது துர்கு. இங்குள்ள மார்க்கெட் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 18 வயது நிரம்பிய ஒருவன், திடீரென சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்களை கத்தியால் குத்தினான்.
அதை பார்த்து மக்கள் அலறிக் கொண்டு ஓடினர். எனினும் 2 பேர் பலியாயினர். எட்டு பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் ஒருவர் இத்தாலி, 2 பேர் சுவீடன், மற்றவர்கள் பின்லாந்தை சேர்ந்தவர்கள்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், கத்தியுடன் இருந்தவனை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். தற்போது அவன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளான். இந்தத் தாக்குதலை முதலில் கொலை என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்தனர். ஆனால், துர்கு பகுதியில் நடந்தது தீவிரவாத தாக்குதல்தான் என்று நேற்று போலீஸார் உறுதி செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கத்திக் குத்து நடத்தியவர் மொராக்கோவைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவத்தை தொடர்ந்து துர்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் நள்ளிரவில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கத்திக் குத்து நடத்தியவருடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது.
முக்கிய குற்றவாளி, துப்பாக்கிச் சூட்டில் தொடையில் குண்டு பாய்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். அவரிடம் விசாரணை நடத்தினால்தான் மேற்கொண்டு தகவல்கள் சொல்ல முடியும். இந்த தாக்குதல் ஐஎஸ் தீவிரவாதிகளின் சதியாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இவ்வாறு போலீஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்த, துர்கு சர்ச்சில் பிரார்த்தனை நடந்தது. இதில் பின்லாந்து அதிபர் சவுலி நினிஸ்டோ உட்பட பலர் பங்கேற் றனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT