Published : 01 Aug 2017 03:21 PM
Last Updated : 01 Aug 2017 03:21 PM
வெனிசுலாவில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெனிசூலாவில் கடந்த 1999 முதல் ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ளது. கடந்த 2013-ல் அப்போதைய அதிபர் சாவேஸ் காலமானதைத் தொடர்ந்து நிக்கோலஸ் மதுரோ புதிய அதிபராக பதவியேற்றார்.
அவரது அரசுக்கு எதிராக கடந்த ஏப்ரலில் கிளர்ச்சி ஏற்பட்டது. இதுவரை நடைபெற்ற போராட்டங்களில் 120-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதிபர் மதுரோ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதை மறுத்த மதுரோ, அரசியல் சாசனம் மாற்றியமைக்கப்படும் என்று அறிவித்தார். இதுகுறித்து கடும் அதிருப்தி தெரிவித்த எதிர்க்கட்சிகள், அரசியல் சாசனத்தை மாற்றியமைப்பது மூலம் பொதுத்தேர்தலை அதிபர் தள்ளிப் போடுகிறார் என்று குற்றம் சாட்டின.
அரசியல் சாசனத்தை மாற்றியமைப்பது தொடர்பாக மக்களின் கருத்தறிய அரசு சார்பில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்து 10 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்த வன்முறையை அடுத்து வெனிசுலாவின் பலமிக்க எதிர்க்கட்சி தலைவர்களான லியோபோடோ லோபஸ் (46) , அண்டோனியா லிடேஸ்மா (62) ஆகிய இருவரையும் வெனிசுலா உளவுத் துறை அதிகாரிகள் கைது செய்ததாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து லிபோபோல்டாவின் மனைவி தனது ட்விட்டர் பக்கத்தில், “புலனாய்வுத் துறை அதிகாரிகள் தற்போதுதான் எனது கணவரை இங்கிருந்து அழைத்துச் சென்றார்கள். அவர் எங்கு இருக்கிறார். அவரை எங்கு வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என்று தெரியவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள இரு தலைவர்களிடன் தொலைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வெனிசுலா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கைது நடவடிக்கை “எங்களை பயமுறித்தி நசுக்குவதற்காக நடத்தப்பட்டது” என்று எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT