Last Updated : 18 Aug, 2017 09:37 AM

 

Published : 18 Aug 2017 09:37 AM
Last Updated : 18 Aug 2017 09:37 AM

ஸ்பெயின் நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்: 13 பேர் பலி; ஐஎஸ் பொறுப்பேற்பு

ஸ்பெயின் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான பார்சிலோனாவில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான லாஸ் ராம்பலாஸில் மக்கள் கூட்டம் கூடியிருந்த நிலையில் வெள்ளை வேன் ஒன்று கூட்டத்துக்குள் தாறுமாறாகப் புகுந்தது. இதில் 13 பேர் பலியாகினர். சுமார் 100 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

இன்னொரு வேன் தாக்குதலில் 2 போலீஸாரை வீழ்த்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

நேரில் பார்த்த டாக்சி ஓட்டுநர் ஒருவர் கூறியதன்படி, பாதசாரிகள் பகுதியில் திடீரென ஒரு வெள்ளை நிற வேன் புகுந்தது அதிவேகமாக அந்த வென் இங்குமங்கும் மக்களைக் குறிவைத்து ஓட்டப்பட்டது, ஒரு 500 அடிக்கு இந்தக் கார் இப்படி ஓடியது, மக்கள் என்னவென்று புரியாமல் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

முதலில் 10 பேரை நசுக்கிக் கொன்றது வேன், அப்போது இது ஒரு விபத்து என்றே பலரும் நினைத்தனர், ஆனால் உடனேயே ரிவர்ஸ் கியர் போட்டு ரம்ப்லாஸில் முழு வேகத்துடன் மக்களை நோக்கி இயக்கப்பட்டது அப்போதுதான் இது பயங்கரவாதத் தாக்குதல் என்று புரிந்ததாக 55 வயது பி.டி. ஆசிரியை ஜோர்டி லபரா என்பவர் செய்தி நிறுவனத்துக்குத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பார்சிலோனாவின் அருகே உள்ள காம்ப்ரில்ஸ் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் தங்கியிருந்த பகுதியை முற்றுகையிட்ட போலீசார், அவர்களை நோக்கி சரமாரியான துப்பாக்கிச்சூட்டை நடத்தினர். சில மணிநேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 1 பயங்கரவாதி காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் இவரும் பிற்பாடு மரணமடைந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பார்சிலோனா நகரில் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதாகவும், காம்ப்ரில்ஸ் நகரில் இரண்டாவது தாக்குதலுக்கு அவர்கள் திட்டமிட்டு இருந்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சண்டையின் போது 9 பொதுமக்கள் மற்றும் ஒரு போலீசார் காயமடைந்துள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்:

இந்தத் தாக்குதலில் இந்தியர்கள் யாரும் சிக்கவில்லை என்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார். தான் இந்திய தூதரக அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் இதுவரை இந்தியர் பலியானதாகத் தகவல் இல்லை என்றும் தெரிவித்தார்.

ஸ்பெயினில் உள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொள்ள +34-608769335 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x