Published : 29 Aug 2017 03:25 PM
Last Updated : 29 Aug 2017 03:25 PM
வடகொரியா நேற்று ஏவிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை முதல்முறையாக ஜப்பான் வான்பகுதியைக் கடந்து சென்று பசிபிக் கடலில் விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம், நாட்டு மக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உறுதி அளித்துள்ளார்.
இதுகுறித்து தென்கொரிய ராணுவ உயர் அதிகாரிகள் கூறியதாவது:
வடகொரிய ராணுவம் தலைநகர் பியாங்யாங் அருகே உள்ள சுனான் விமான நிலையத்திலிருந்து ஒரு ஏவுகணையை ஏவியது. அந்த ஏவுகணை ஜப்பானின் ஹொக்கைடோ தீவின் வான்பகுதியைக் கடந்து சென்று வடக்கு பசிபிக் கடலில் விழுந்தது. சுமார் 550 கி.மீ. உயரத்தில் பறந்து சென்ற இந்த ஏவுகணை சுமார் 2,700 கி.மீ. தூரம் பயணித்துள்ளது.
வடகொரிய ஏவுகணை ஜப்பான் வான்பகுதியைக் கடந்து சென்றது இதுவே முதல்முறையாக இருக்கும் என கருதப்படுகிறது. மேலும் இது வடகொரியாவின் மிக நீண்டதூர ஏவுகணை சோதனையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து ஆய்வு நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்த
ஏவுகணை சோதனையால் அந்த பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் தங்கள் நாட்டு கப்பல்களுக்கோ, வேறு எந்த வகையிலுமோ பாதிப்பு ஏற்படவில்லை என ஜப்பான் தெரிவித்துள்ளது.
அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே கூறும்போது, “முன் எப்போதும் இல்லாத வகையில் எங்கள் நாட்டின் மீது செல்லும்வகையில் வடகொரியா ஏவுகணையை ஏவியிருப்பது கண்டிக்கத்தக்கது. இது மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும். எனினும் நாட்டு மக்களின் உயிரைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
ஐ.நா. சபையின் கடும் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து அணுகுண்டு, ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவின் குவாம் தீவை தாக்கும் திறன் வாய்ந்த ஏவுகணையை தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
வடகொரியா ஏவுகணை ஏவியதற்கு பதிலடியாக தென்கொரிய விமானப்படை நேற்று தாபேக் எல்லைப் பகுதியில் 8 சக்கிவாய்ந்த குண்டுகளை வீசியது. தென்கொரிய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில், வடகொரியாவின் எத்தகைய அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஐ.நா. சபை மற்றும் சர்வதேச நாடுகளின் எச்சரிக்கையை மீறி வடகொரியா செயல்படுகிறது. எதையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே தென்கொரிய பாதுகாப்புத் துறை அமைச்சர் சாங் யங்-மூ நேற்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு புறப்பட்டார். அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜிம் மேத்திஸை அவர் இன்று சந்தித்துப் பேசுகிறார். அப்போது வடகொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது குறித்து வியூகம் வகுக்கப்படும் என்று தெரிகிறது.
சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஹூ சூன்யங், பெய்ஜிங்கில் நேற்று கூறியபோது, பதற்றமான இந்த சூழ்நிலையில் அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT