Published : 18 Aug 2017 10:08 AM
Last Updated : 18 Aug 2017 10:08 AM
அடுத்த மாதம் ஹஜ் யாத்திரை தொடங்க உள்ள நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்ட காத்தார் எல்லையை திறந்துவிடுமாறு சவுதி அரேபிய மன்னர் உத்தரவிட்டுள்ளார்.
தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி, கத்தார் நாட்டுடனான தூதரக மற்றும் வர்த்தக உறவை முறித் துக் கொள்வதாக, சவுதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய வளைகுடா நாடுகள் கடந்த ஜூன் 5-ம் தேதி அறிவித்தன.
இதையடுத்து, கத்தாருடனான விமான மற்றும் கடல் வழி போக்குவரத்தை வளைகுடா நாடுகள் ரத்து செய்தன. பொருளாதார தடையும் விதித்தன. கத்தாருடனான எல்லையை சவுதி அரேபியா மூடியது. ஆனால் தங்கள் மீதான குற்றச்சாட்டை கத்தார் மறுத்தது.
இந்நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கான ஹஜ் யாத்திரை அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில், கத்தார் தூதர் ஷேக் அப்துல்லா பின் அலி பின் ஜசிம் அல்-தானி, சவுதி மன்னர் முகமது பின் சல்மானை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். அப்போது, தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இதையடுத்து, ஹஜ் பயணத்துக்காக கத்தார் சல்வா எல்லையை திறந்துவிடுமாறு மன்னர் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கத்தார் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள மின்னணு அனுமதிச் சீட்டு தேவையில்லை என்றும் சவுதி அரசு தெரிவித்துள்ளது.
மேலும் கத்தார் யாத்ரீகர்களை ஏற்றி வருவதற்காக அந்நாட்டு தலைநகர் தோஹாவுக்கு சவுதி ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானங்கள் (சொந்த செலவில்) அனுப்பி வைக்கப்படும் என்றும் மன்னர் உத்தரவிட்டுள்ளார்.
எனினும், இந்த நடவடிக்கையால் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் ஏற்பட்ட விரிசலில் எந்த மாற்றமும் ஏற்படாது என கருதப்படுகிறது.
இதுகுறித்து வாஷிங்டனில் உள்ள சிந்தனை அமைப்பான அரேபியா பவுண்டேஷனைச் சேர்ந்த அலி ஷிஹாபி கூறும்போது, “கத்தார் நாட்டு மக்கள் மீதான நல்லெண்ணத்தின் அடிப்படையில் சவுதி இந்த முடிவை எடுத்துள்ளது. ஆனால், அந்நாட்டு அரசுடனான மோதல் தொடரும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT