Published : 07 Nov 2014 09:35 AM
Last Updated : 07 Nov 2014 09:35 AM

உலக மசாலா: கரடிகளுடன் செல்ஃபி

உலகம் முழுவதும் செல்ஃபி மோகம் அதிகரித்து வருகிறது. கலிஃபோர்னியாவில் சுற்றுலாப் பயணிகள் வரும் வனப் பகுதிகளில் செல்ஃபி எடுத்துக்கொள்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். வனப்பகுதியில் சுற்றித் திரியும் கரடிகளுடன் சேர்த்து தங்களைப் படம் பிடித்து, உடனே இணையதளங்களில் ஏற்றி, லைக்ஸ் அள்ளுவதுதான் பெரும்பாலானவர்களின் லட்சியமாக இருக்கிறது. கரடிக்குத் துன்பம் விளைவிக்காத வரை, அது சாதுவான பிராணியாகத்தான் இருக்கும். ஆனால் மனிதர்கள் அருகில் செல்லும்போது, தன்னைத் தாக்க வருகிறார்களோ என்ற அச்சத்தில் அதுவும் தாக்குதலுக்குத் தயாராகிவிடும். கரடியால் உயிரிழப்பு கூட ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்க வனத்துறை எல்லா விஷயங்களையும் சொல்லி, எச்சரித்தும்கூட கரடியோடு படம் பிடிக்கும் செல்ஃபி ஆர்வம் குறையவே இல்லை.

உயிரை விட செல்ஃபி அவ்வளவு முக்கியமா போயிருச்சா உங்களுக்கு?

நிகுயென் ஹோங் ஹங் வியட்நாமைச் சேர்ந்த முடி திருத்தும் கலைஞர். இதுவரை யாருமே பயன்படுத்தாத, கற்பனை கூட செய்து பார்த்திருக்க முடியாத கருவியை, முடி வெட்டுவதற்குப் பயன்படுத்தி வருகிறார்! அதாவது மிக நீண்ட வாளை வைத்து முடியை வெட்டுகிறார். ஆனாலும் அவரது வேகமோ, நேர்த்தியோ சிறிதும் குறையவில்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் கத்தரியை வைத்து முடி வெட்டாமல், வேறு கருவியைப் பயன்படுத்தச் சொல்லிக் கேட்டுக்கொண்டார்கள். ரம்பத்தை வைத்து முடி வெட்டிக் காட்டி, பார்வையாளர்களை அசத்தினார் ஹங். அதற்குப் பிறகு தான் வாளை வைத்துப் பயிற்சி செய்தார். இன்று கத்தரியை விட வாளால் முடி வெட்டுவது மிகவும் வசதியாக இருக்கிறது என்கிறார்.

இந்த வாளைப் பார்த்த பிறகும் தலையை உங்ககிட்ட கொடுக்கிறாங்கன்னா என்னன்னு சொல்றது ஹங்!

சீனாவின் ஷென்ஷென் நகரில் ஒரு ஜோடி திருமணம் செய்துகொள்ள இருந்தது. திடீரென்று மணமகளுக்கு, தான் மணக்க இருக்கும் மனிதர் எவ்வளவு தூரம் தன்னை விரும்புகிறார் என்பதை அறிந்துகொள்ள ஆர்வமாக இருந்தது. உடனே வயதான தோற்றத்தில் மேக் அப் செய்துகொண்டார். மணமகளைக் கண்ட மணமகன் அதிர்ந்து போனார். ஆனாலும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. சிறிது நேரத்தில் மேக் அப் கலைத்தார் மணமகள். யாரும் எதிர்பாரா விதத்தில் மணமகன் சண்டையிட்டார். தன்னைச் சந்தேகித்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள இயலாது என்று கூறிவிட்டார். விளையாட்டு, தன் வாழ்க்கையைத் திருப்பிப் போட்டுவிட்டதில் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார் மணமகள்.

விளையாட்டு வினையாகிவிட்டது…

ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பாண்டாக்கள், வெற்றிகரமாகத் தங்களின் 100வது நாளைக் கொண்டாடி இருக்கின்றன! அருகிய உயிரினமாகக் கருதப்படும் பாண்டாக்களில் ஒரு பிரசவத்தில் மூன்று குட்டிகள் பிறப்பது அரிது. அதிலும் மூன்றும் 100 நாட்கள் தாண்டியும் உயிருடன் இருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை என்கிறார் சீனாவின் சிஹிமெலாங் சஃபாரி பார்க் பூங்காவின் மேனேஜர். பிறக்கும் போது 100 கிராம் இருந்த இந்தக் குட்டிகள், இப்போது சுமார் 5 கிலோ அளவுக்கு வளர்ந்து, ஆரோக்கியமாக இருக்கின்றன.

பல்லாண்டு வாழ்க வாழ்க!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x