Published : 20 Aug 2017 01:09 PM
Last Updated : 20 Aug 2017 01:09 PM
தென்கொரியாவின் கப்பல் ஒன்று இன்று வெடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.
கப்பல்கட்டும்துறையில் புதிய கப்பல் ஒன்றின் கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதுதான் இவ்விபத்து நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து குறித்து யான்ஹப் செய்தி நிறுவனம் தெரிவித்ததாவது:
தென்கிழக்கு நகரமான சாங்வோனில் உள்ள எஸ்டிஎக்ஸ் கடற்பகுதியில் புதிய கப்பல்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு ஒரு புதிய கப்பலின் கட்டுமானப் பணியின்போது அக்கப்பலின் உட்பகுதியில் தொழிலாளர்கள் வண்ணம் பூசும் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அதிலிருந்த எண்ணெய் டேங்கர் வெடித்தது. இதனால் சம்பவ இடத்திலேயே பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பேர் உயிரிழந்ததாக கட்டுமானத் துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 30 லிருந்து 50 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களது உடல்கள் உடனடியாக மீட்கப்பட்டன. இவ்விபத்துக்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் நிபுணர் குழு ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து சம்பவ இடத்தில் நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், ''பாங் என பெரியதாக வெடிச் சத்தம் கேட்டது. என்னவென்று பார்க்கும்போது கப்பலில் இருந்த எண்ணெய் டேங்கரிலிருந்து புகை வெளியே வருவதைப் பார்த்தேன்'' என்றார்.
74 ஆயிரம் டன் கொள்ளளவு பிடிக்கும் பிரமாண்டமான எண்ணெய் டேங்கர் கப்பலை ஜெர்மனி கப்பல் நிறுவனத்திற்காக தயாரித்து அக்டோபரில் வழங்க உள்ள நிலையில் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய கப்பல் கட்டும் நாடுகளில் தென்கொரியா முக்கிய இடம் வகித்துவருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT