Published : 27 Jul 2017 07:58 AM
Last Updated : 27 Jul 2017 07:58 AM
விடுதலைப் புலிகள் அமைப்பை தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் நீக்கியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு 28 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு தீவிரவாத இயக்கங்களை பட்டியலிடத் தொடங்கியது. கடந்த ஜனவரி மாதம் வரை இந்தப் பட்டியலில் 13 தனிநபர்களையும், 22 அமைப்புகளையும் சேர்த்துள்ளது.
இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பை கடந்த 2006-ம் ஆண்டு தீவிரவாத பட்டியலில் ஐரோப்பிய யூனியன் அமைப்பு சேர்த்தது. இந்த நிலையில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற போரில் கடந்த 2009-ம் ஆண்டு எல்.டி.டி.இ. அமைப்பு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது.
அதன்பின் குண்டுவெடிப்பு, துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட எந்தச் செயல்களும் இலங்கையில் நிகழவில்லை. இந்நிலையில் ஐரோப்பிய யூனியன் நீதிமன்றத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து இதனை விசாரித்த அந்த நீதிமன்றம், விடுதலைப் புலிகள் அமைப்பை பட்டியலில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த அமைப்பின் நிதி ஆதாரங்கள் முடக்கத்தையும் நீக்கியுள்ளது. அதேநேரம் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பை தீவிரவாதப் பட்டியலில் நீதிமன்றம் சேர்த்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT