Published : 24 Nov 2014 08:29 AM
Last Updated : 24 Nov 2014 08:29 AM

எப்படியெல்லாம் அழிக்கிறது இந்த எபோலா

லைபீரியாவில் நடந்த 14 ஆண்டு உள்நாட்டுப் போரைக்கூட அதிக ஆள்சேதம் இல்லாமல் தாக்குப்பிடித்துவிட்டது கைசர் டௌரின் குடும்பம். ஆனால் பாழாய்ப்போன இந்த எபோலா வைரஸுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பலியானதுதான் கொடுந்துயரம்.

மன்ரோவியா நகரின் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலை சந்திப்பு அது. ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் மக்கள் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்காமல் வீதியில் நடமாடிக்கொண்டிருந்தனர். எஸ்தர் என்ற 5 வயதுச் சிறுமி எபோலா காய்ச்சலின் கடுமையைத் தாங்க முடியாமல் வீதியில் விழுந்த ஒரு மலர் போல தரையில் படுத்திருந்தாள். கடுமை யான வெயில் அடிக்கிறதே, இந்தக் குழந்தை சிணுங்கக்கூட காணோமே என்று மனம் பதைத்தது. அதைவிடப் பலமடங்கு வெப்பத்துடன் உள்ளே அடித்துக்கொண் டிருந்த காய்ச்சல் காரணமாக முனகக்கூட சக்தியற்று முடங்கிவிட்டது அந்த முல்லைக்கொடி.

நூற்றுக்கும் மேற்பட்டோர் பரிதவிப்பும் பயமும் சூழ சுற்றி நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். சுற்றி நின்று என்றால் அவளைச் சுற்றியல்ல, சுமார் 100 அடிக்கு அப்பால் நின்றுகொண்டு பார்த்துக்கொண்டிருந்தார்கள். சுற்றியி ருந்த பெண்களால் அந்தக் குழந்தையைப் பார்க்கவும் முடியவில்லை, பார்க்காமல் கண்ணை அகற்றவும் முடியவில்லை. இனி அந்தக் குழந்தையைக் காப்பாற்ற முடியாது என்று தெரிந்துவிட்டது. அருகில் நெருங்கினால் தங்களுக்கும் காய்ச்சல் தொற்றும் என்று தெரிந்ததால் விலகி நின்றனர். பெண்களில் சிலர் வாய்விட்டு அரற்றினார்கள். “எங்களைக் காப்பாற்ற யாருமே இல்லையா, தெய்வமே உனக்குக் கண்ணே இல்லையா, நாங்கள் தான் கிடைத்தோமா இந்தப் பேரழி வுக்கு” என்று சாடினார்கள். ஆண்கள் சோகத்தைச் சொல்லக்கூட வழியில்லாமல் மவுனத்தில் உறைந்து மிரளமிரள பார்த்துக்கொண்டிருந்தார்கள். (ஒரு வாரம் கழித்து அந்தச் சிறுமி இறந்தாள் என்பதைப் பதிவு செய்யவே கைகள் நடுங்குகின்றன).

அந்தப் பகுதி வட்டாரத் தலைவர் கையில் ஒரு நோட்டுப்புத்தகத்துடன் அங்கு வந்தார். அந்தக் குழந்தையின் உறவினர்கள் யார் யார், அவர்களில் நோய் வந்தவர்கள் எத்தனை பேர், இறந்த வர்கள் எத்தனை பேர், காய்ச்சல் என்றதும் எவர் கண்ணிலும் படாமல் ஓடி ஒளிந்தவர்கள் எத்தனைபேர் என் றெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார். அக்கம்பக்கத்து வீட்டார் என்று சுமார் அரை டஜன் பேர் சூழ்ந்து நின்று கோபமாக கத்திக்கொண்டும் பீதியில் அலறிக் கொண்டும் இருந்தார்கள். ஒருவர் சொன்னதை இன்னொருவர் மறுத்தார், இன்னொருவர் சொன்னதை மற்றொருவர் திருத்தினார். அவர்களுக்குள் ஆற்றா மையும் இனம் தெரியாத கோபமும் பொங்கிக்கொண்டிருந்தது. யார் சொன்னது எந்த அளவுக்கு உண்மை என்று யாருக்கும் நிச்சயமாகத் தெரியாது. அந்தப் பெண்ணின் குடும்பத்தவர்களுக்கு ஏதோ விபரீதம் நேர்ந்துவிட்டது என்று புரிந்தது. பக்கத்தில் வந்து பரிவு காட்டக்கூட உறவினர்கள் யாரும் இல்லை.

எஸ்தர் மட்டும் அல்ல, ஏராளமானோர் இப்படித்தான் உறவினர்கள் கண் எதிரிலேயே தொலைதூரத்தில் துடி துடிக்க இறந்தார்கள். எபோலாவுக்கு சிகிச்சை செய்ய போதிய மருத்துவ மையங்கள் இல்லை. 14 ஆண்டுகள் உள்நாட்டுப் போரில் பாழாய்ப்போன அந்த நாட்டில், மக்களுக்கு ஆதாரம் என்றால் அவரவர் குடும்பங்களும் தேவால யமும்தான். துரதிருஷ்டவசமாக இந்த நோய்த் தொற்று ஏற்படுவதும் இவ்விரு இடங்களில்தான். தேவாலயப் பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகளும் தங்கள் உயிரைக் கொடுத்தும் ஆம், அவர்களில் பலரும் பலியாகிக் கொண் டிருக்கிறார்கள் காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள். காலன் வலிமை பெற்று விட்டான்.

லைபீரியா மட்டுமல்ல பக்கத்து நாடான சியாரா லியோனும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தவருக்கே தங்களுக்கு என்ன நேர்ந்தது, இன்னும் எத்தனை பேர் காய்ச்சலுக்கு ஆளாகிவிட்டனர், எத்தனை பேர் பலியாகிவிட்டனர் என்பது தெரியாது. ஏனென்றால் நோய் வந்தவுடனேயே அவர்கள் அப்புறப் படுத்தப்படுகின்றனர். இறந்தவர் குறித்து இருப்பவருக்குத் தெரியாது, இருப்பவர் குறித்து அடுத்தவருக்குத் தெரியாது. இன்னமும் பலர் இதன் விபரீதத்தை உணராமலோ, வேறு வழியின்றியோ காய்ச்சல் வந்தவர்களை வீட்டில் வைத்து பராமரிக்கின்றனர். வாழும்வரை உதவி செய்வோம், வாழ்க்கை முடிவதைப்பற்றி இப்போது நினைக்க வேண்டாம் என்ற முடிவுக்குப் பலர் வந்துவிட்டனர்.

என்ன சொன்னோம் - உறவினர் யாரும் இல்லாமல் எஸ்தர் இறந்துவிட்டாள் என்றா, இல்லையில்லை. அந்தக் கூட்டத்தில் நின்ற ஒருவர்தான் அவளுடைய அப்பா லெஸ்டர் மோரிஸ். தூரத்தில் விழுந்து கிடந்த தன்னுடைய அருமை மகளைத் தோளில் தூக்கி போட்டுக்கொண்டோ, மடியில் வைத்துக்கொண்டோ கதறக்கூட கொடுத்து வைக்காத பாவி அவர். ஆம், எஸ்தர் பிழைக்க மாட்டாள், அவளுடைய அம்மாவையாவது காப்பாற்றுவோம் என்று மனதைக் கல்லாக்கிக்கொண்டு தூரத்தே நின்று கொண்டிருந்தார். மகள் இறந்ததைக் கேட்டதும் கதறி அழுதார். அருகில் வந்து உன்னை அணைத்து முத்தமிடத் தவறிய பாவியடி நான், என் மகளே என்னை மன்னித்துவிடம்மா, இனி என்னைப்போல ஒருவன் உனக்குத் தகப்பனாக வேண்டாம் அம்மா என்று கதறிக் கொண்டிருக்கிறார். குழந்தை இறந்த சோகத்தைவிட, அருகில் செல் லாமல் இருந்துவிட்டோமே என்ற குற்ற வுணர்ச்சியில் புழுவாய்த் துடிக்கிறார்.

இன்னொருவர் மார்க் ஜெர்ரி. காய்ச்சலில் விழுந்த மனைவி எட்வினா வைக் காப்பாற்ற எப்படியெல்லாமோ முயன்றார். அவரைக் கண்டுபிடிக்க கடும் முயற்சிகளைச் செய்தோம்.

அவருடைய வீடு, அவர் செல்லும் தேவாலயம் அவருடைய பாட்டியின் வீடு என்று பல இடங்களிலும் அலைந் தோம். அவருக்கும் நோய் தொற்றியது. எல்லோரும் கேட்டபோது மறுத்தார். எனக்கு டைபாய்டுதான் என்றார். கடைசி யில் அவர் இன்னொரு மகள் பிரின்ச ஸுடன் எபோலா சிகிச்சை மையம் எதிரில் வரிசையில் காத்திருப்பதை அறிந்து செல்போனில் தொடர்புகொண் டோம். எங்களுடைய குரலைக் கேட்டு விட்டு செல்போன் இணைப்பைத் துண்டித்துவிட்டார் மார்க் ஜெர்ரி. காரணம் புரிகிறது. துயரமான இந்தத் தருணத்தில் சிலர் அளவுக்கு அதிக மாகப் பேசிக்கொண்டே இருக்கி றார்கள். சிலர் பேசவே மறுக்கிறார்கள்.

ஐவரிகோஸ்ட் நாட்டில் அகதிகள் முகாமில் சில காலம் இருந்துவிட்டு லைபீரியா திரும்பிய ஒருவரைச் சந்தித் தோம். அவர் முகாமிலிருந்தபோது டேக்வாண்டோ என்கிற விளையாட்டையும் மரச் சாமான்கள் செய்வதையும் பிரெஞ்சு மொழியையும் கற்றுக்கொண்டிருக்கிறார். அருகிலிருக்கும் பலருக்கும் தெரியக் கூடாது என்பதற்காக என்னுடன் பிரெஞ்சு மொழியிலேயே அதிக நேரம் பேசினார். எங்கிருந்தோ தாய் நாட்டுக்குத் திரும்பிய அவர் தன்னுடைய குடும்பத்துக்கு என்ன நேர்ந்தது என்று புரியாமல் திகைத்து நின்றதை அவருடைய பேச்சு உணர்த்தியது.

நோய் பரவுகிறது, சிகிச்சை அளிக்க அரசிடம் ஏதுமே இல்லை. காப்பாற்ற வழி தெரியாமல் மக்கள் அலையலையாக செத்துக்கொண்டிருக்கிறார்கள். குடும்பப் பாசம்தான் அவர்களை உதவச் சொல் கிறது. மரண பயம்தான் அவர்களை விலகச் சொல்கிறது. எந்தக் குடும்பத்தை அணுகினாலும் இதேதான் கதை.

© தி நியூயார்க் டைம்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x