Published : 05 Nov 2014 08:44 AM
Last Updated : 05 Nov 2014 08:44 AM

உலக மசாலா: அம்மாவின் முன்னாள் காதலர்

விளையாட்டையும் புட்பால் விளையாட்டையும் சேர்த்து ஸ்நூக்பால் என்ற புதிய விளையாட்டு பிறந்திருக்கிறது. மிகப் பெரிய பில்லியர்ட்ஸ் டேபிள் தரையில் வைக்கப்பட்டிருக்கும். இதில் ஸ்நூக்கர் பந்துகளுக்குப் பதில் கால்பந்துகள். கால்கள் மூலம் பந்துகளை பாக்கெட்களில் போட வேண்டும். மற்றபடி ஸ்நூக்கருக்கு உண்டான அத்தனை விதிமுறைகளும் இதற்கும் உண்டு. ஆரிலியன் மற்றும் சாமுவேல் என்ற பிரெஞ்சுக்காரர்களின் கண்டுபிடிப்பில் உருவாகியுள்ள இந்த விளையாட்டில் 4 பேர் வரை கலந்துகொள்ள முடியும். ஸ்நூக்கரை விட சுவாரசியம் அதிகம் இருக்கும் என்கிறார்கள்.

இதைத்தான் மாத்தி யோசி என்கிறார்களோ…

***

சோபியா பெட்ரோவா 18 வயது இளம் பெண். வீட்டில் திருடுகிறார், பொய் சொல்கிறார், பள்ளி வகுப்பைப் புறக்கணிக்கிறார் என்ற காரணங்களுக்காக, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிலிருந்து ரஷ்யாவுக்கு அவரது அம்மா மற்றும் வளர்ப்புத் தந்தையால் அனுப்பி வைக்கப்பட்டார். ரஷ்யாவில் சோபியாவின் அப்பா வசிக்கிறார். விடுமுறைக்கு வந்ததாக நினைத்துக்கொண்டிருந்த சோபியாவுக்கு, திரும்பிச் செல்வதற்கான டிக்கெட் இல்லை என்பது பிறகுதான் புரிந்தது.

அம்மாவிடம் தொடர்புகொண்டபோது, தண்டனையாக அனுப்பி வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அப்பாவும் குடித்துவிட்டு சோபியாவை அடித்து, துன்புறுத்தி வந்தார். எத்தனையோ தடவை போனிலும் கடிதங்களிலும் மன்னிப்புக் கேட்டு அம்மாவிடம் கெஞ்சிப் பார்த்துவிட்டார் சோபியா. பலன் ஒன்றும் இல்லை. அப்பொழுது தான் பரித் சொலிமனியின் நினைவு வந்தது. அவர் சோபியா அம்மாவின் முன்னாள் காதலர். 13 வயது வரை அவர்தான் தன் தந்தை என்று நினைத்திருந்தார் சோபியா. ஒருநாள் உறவு முறிய, அவர் பிரிந்து சென்றுவிட்டார். மொராக்கோவிலிருக்கும் பரித்தைத் தொடர்புகொண்டார்.

உடனே சோபியாவை அழைத்துச் சென்றார் பரித். 'அப்பாவின் அன்பை பரித்திடம்தான் பெற்றிருக்கிறேன். அதனால் என் பெயருக்குப் பின்னால் அவர் பெயரைச் சேர்த்துவிட்டேன். அப்பா, பாட்டி என்று சந்தோஷமாக இருக்கிறேன். கடந்த 3 ஆண்டுகள் கொடுமையான காலகட்டம். அந்தச் சம்பவங்களைப் புத்தகமாக எழுத இருக்கிறேன்' என்கிறார் சோபியா.

பரித் மாதிரி நல்ல மனிதர் அப்பாவாக இருக்கும்போது, இனி உங்களுக்கு எந்தக் கஷ்டமும் வராது சோபியா.

***

பிளைமவுத்தில் வசிக்கும் மவுண்டர், 13 ஆண்டுகளுக்கு முன்பு அன்னெட் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக அமைந்தது. 55 வயது அன்னெட் சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். போராடிப் பார்த்தார். உயிர் பிழைக்கும் வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்துகொண்டார். 'என் உடலை எரித்த பிறகு, கிடைக்கும் சாம்பலைக்கொண்டு புஸ்வானம், பட்டாசுகள் செய்யவேண்டும்.

வானில் நட்சத்திரங்களாக நான் வெடித்துச் சிதற வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார். அன்னெட் இறந்த உடன், சாம்பலைக்கொண்டு பட்டாசுகளைத் தயாரித்து, 2 நிமிடங்கள் வானில் வெடிக்கச் செய்து, தன் அன்பு மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றியிருக்கிறார் மவுண்டர். 'என் இத்தனை வருட வாழ்க்கையில் அன்னெட்டுடன் வாழ்ந்த 13 ஆண்டுகள்தான் மிக மகிழ்ச்சியான காலகட்டம். அவருடைய விருப்பத்தை நிறைவேற்றி, வழியனுப்பி வைப்பதில்தானே என்னுடைய அன்பு அடங்கியிருக்கிறது' என்று நெகிழ்கிறார் மவுண்டர்.

அன்புக்கு எல்லை ஏது!

***

டிபோரா ஹார்ன்பெர்கெர், ஸ்டீபனே லாங்லியர் ஜோடிக்கு சவப் பெட்டிகளைச் சுமந்து செல்லும் கார்களை வாங்குவதில் ஆர்வம் அதிகம். சவப்பெட்டி கார்களை வாங்கி, உள்பக்கமும் வெளிப்பக்கமும் மாற்றங்கள் செய்து, வசதிகளை மேம்படுத்தி பயன்படுத்தி வருகிறார்கள். இந்த வித்தியாசமான கார்களை எடுத்துச் சென்று, கார் ஷோக்களில் கலந்துகொள்கிறார்கள். மீதி நேரங்களில் இந்த கார்களை ஆம்புலன்ஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு, ஆம்புலன்ஸ் போலப் பயன்படுத்துகிறார்கள். அதில் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால், ஆம்புலன்ஸ் சவப்பெட்டிகாராக மாற்றமடைந்துவிடும்.

விநோத மனிதர்கள்… விநோத விருப்பங்கள்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x