Published : 05 Jul 2017 04:37 PM
Last Updated : 05 Jul 2017 04:37 PM
ராணுவ மோதலைத் தூண்டுவதற்கு இந்தியா ஏதாவது முயற்சி மேற்கொண்டால் 1962-ஐ விட அதிக இழப்புகளை இந்தியா சந்திக்க நேரிடும் என்று சீன ஊடகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா வரலாற்றுப் பாடங்களைப் புறக்கணிக்கிறது என்றது சீனா. சிக்கிம் எல்லைப் பிரச்சினை விவகாரத்தில் "வரலாற்றை சீனா நமக்கு நினைவூட்ட விரும்பினால், 1962 சூழ்நிலை வேறு, 2017-ல் இந்தியா வேறு” என்று அருண் ஜேட்லி சீனாவுக்கு பதிலடி அளித்தார்.
இதற்கு பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங், “1962 இந்தியாவுக்கும் 2017 இந்தியாவுக்கும் வித்தியாசம் உள்ளது என்று அருண் ஜேட்லி கூறுவது சரியே அதே போல்தான் சீனாவும் மாறிவிட்டது.
இந்திய அரசு 1890 உடன்படிக்கையை மதிக்க வேண்டும். எல்லையைக் கடந்து வரும் இந்திய படைகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். எங்களுடைய இறையாண்மையைக் காக்க நாங்கள் நடவடிக்கைகளை எடுத்தே தீருவோம்" என்று இந்தியாவை மறைமுகமாக எச்சரித்தார்.
இதற்கிடையில் சீனாவின் பிரபல பத்திரிக்கை ஒன்று இதுதொடர்பாக வெளியிட்ட கட்டுரையில், "சீன படையினர் இந்திய துருப்புகளை வெளியேற்றுவதற்கு போதுமான சக்தி கொண்டுள்ளனர். 1962-ல் இருந்த இந்திய ராணுவம் தற்போது இல்லை என்று அருண் ஜேட்லி மிகச் சரியாக கூறியிருக்கிறார். எனவே இராணுவ மோதலைத் தூண்டுவதற்கு இந்தியா ஏதாவது முயற்சி மேற்கொண்டால் 1962-ல் ஏற்பட்ட இழப்புகளைவிட கூடுதலான இழப்புகள் இந்தியாவுக்கு ஏற்படும்.
இருப்பினும் அமைதியான தீர்வு முறையையே சீனா விரும்புகிறது” என்று கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT