Last Updated : 18 Nov, 2014 12:32 PM

 

Published : 18 Nov 2014 12:32 PM
Last Updated : 18 Nov 2014 12:32 PM

நம்மால் பயங்கரவாதத்தைத் தடுத்து நிறுத்த முடியும்: ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் மோடி உரை

பயங்கரவாதிகளுக்கு இணைய வசதி ஏதுவாக அமைந்துவிட்டதைச் சுட்டிக்காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, நம் நாடுகளுக்குள் துறைமுகம் வாயிலாக நுழைய முற்படும் பயங்கரவாதத்தை நம்மால் தடுத்து நிறுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஜி20 மாநாட்டில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார். அதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

கான்பெர்ராவில் உள்ள ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை பேசியது:

"ஆஸ்திரேலியாவுக்கு இந்திய பிரதமர் வருவதற்கு 28 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலை கூடிய விரைவில் மாறும். ஆஸ்திரேலியா மீது இந்தியாவுக்கு எப்போதும் மிகுந்த மரியாதை கொண்டுள்ளது. இந்த நாட்டின் மீதான எங்களது பார்வை எல்லைக்கு உட்பட்டதல்ல.

இரு நாடுகளுக்கு பயங்கரவாதம் மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது. இந்தியா தொடர்ந்து 30 ஆண்டுகளாக பயங்கரவாதத்துக்கு எதிராக போராடி வருகிறது. பயங்கரவாதத்தின் மீது சரியான புரிதலை நாங்கள் கொண்டுள்ளோம். பயங்கரவாதிகள் தற்போது தங்களது எல்லையை விரிவாக்கம் செய்துகொண்டு இருக்கிறார்கள். இதற்கு இணைய வசதி அவர்களுக்கு ஏதுவாகிவிட்டது.

வன்முறையை தொழில்நுட்பத்தின் மூலம் இணைத்து அவர்கள் சாதிக்க நினைக்கின்றனர். பண மோசடி, போதை மருந்து கடத்தல் மற்றும் ஆயுதக் கடத்தல் ஆகியவை இணையத்தின் வழியாகவே நடத்தப்படுகின்றன. உலகளாவிய பிரச்சினையாகிவிட்ட இவற்றை நாம் ஒன்றாக எதிர்க்க வேண்டும். உலகளாவிய பிரச்சினைகளுக்கு உலகளாவிய தீர்வுக் காணப்பட வேண்டும்.

நட்பில் முதன்மை

இந்தியாவுடனான நட்பு நாடுகளில் ஆஸ்திரேலியா முன்னணியில் இருக்கின்றது. இந்த எண்ணத்தை உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பெற்றுள்ளதாக என்னால் கூற முடியாது. இரு நாடுகளாலும் பல விஷயங்களை இணைந்து சாதிக்க முடியும்.

நமது துறைமுகங்களில் நுழைய நினைக்கும் பயங்கரவாதத்தை, நமது மாநிலங்களாலே தடுத்து நிறுத்த முடியும். பயங்கரவாதத்துக்கு எதிராக சமூகம் ஒன்று கூடி எழுந்தால் அவர்களால் ஊடுருவ முடியாது என்பது நிச்சயம்.

பிராந்தியங்களிலும் மாநிலங்களிலும் ஏற்படும் அரசியல் போட்டி சில பிரச்சினைகளை உண்டாக்குகின்றன. ஆனால், உலக அளவில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதே இல்லை. நாடுகள் ஒருங்கிணைவது முக்கியத்துவம் வாய்ந்தது.

கடலோரப் பாதுகாப்பு வசதிகளில் நாம் ஒன்றாக செயல்பட வேண்டும். கடலோரத்தில் நாம் ஒன்றாக உழைத்தால், சர்வதேச பிரச்சினைகளுக்கு தீர்வு அமையும். அதேபோல சர்வதேச நாடுகளின் சட்டங்களுக்கு அவர்களின் கொள்கைகளையும் நாம் மதித்து நடக்க வேண்டும்.

அணு ஒப்பந்தம்

அடுத்தக் கட்டமாக விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிப் பயணத்திலும் இணைய மேம்பாட்டிலும் நாம் முன்னோடியாக இருந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பல சாதனைகளை ஒன்றாகப் பெற வேண்டும். அடுத்ததாக, விரைவில் அணுசக்தி தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும்.

பேரிடர் சம்பவங்களை இரு நாடுகளும் அவ்வப்போது சந்தித்து வருகின்றன. இதனால் பல வகையிலான இழப்புகள் ஏற்படுகின்றன. சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் தேர்ந்த தொலைநோக்கு நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. நாட்டின் கலாச்சாரம் சரியான பார்வையோடு எடுத்து செல்லப்பட வேண்டும். இதில் சிறிய நாடுகள், பெரிய நாடுகள் என்ற வேறுபாடு இல்லாமல் செயல்படுவது அவசியமாகும்.

மேம்பாட்டுத் திட்டங்கள்

'இந்தியாவில் உருவாக்குவோம்' என்ற திட்டம் குறித்து விரைவில் ஆஸ்திரேலியாவில் கருத்தரங்கு நடத்த ஏற்பாடு செய்யப்படும். இந்த திட்டத்தின் பெயர் மட்டுமே 'இந்தியாவில் உருவாக்குவோம்'. ஆனால் இதற்கான வழிமுறைகள் எந்த இடத்தில் சிறந்து விளங்குகிறதோ, அதனை பின்பற்றுவதில் தவிறில்லை.

இந்திய நகரங்களில் பல மேம்பாட்டுத் திட்டங்களை ஏற்படுத்த வேண்டிய கடமை ஆஸ்திரேலியாவுக்கு உள்ளது. இந்தியாவின் வளர்ச்சி, மக்கள் தொகை ஆகியவற்றில் ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் தனித்தன்மை உள்ளது. இவை வளர்ச்சிக்கு நீண்ட கால வாய்ப்பு வழங்கும், அத்தகைய கட்டமைப்பை தான் நமது ஜனநாயகம் பெற்றுள்ளது.

இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் புவியியல் ரீதியாக ஒரு கண்டத்தில் இணைந்து இருந்ததாக ஆய்வாளர்கள் கூறிகின்றனர். இவை பின்னர் சில கால மாற்றங்களால் பிரிந்ததாம். இந்த இணைப்பு மீண்டும் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆனால் நமது வரலாறு அதனை நிரூபிக்கின்றது. இனி வரும் காலங்களிலும் நாம் இணைந்தே செயல்படுவோம்" என்றார் மோடி.

5 ஒப்பந்தங்கள் கையெழுத்து

ஆஸ்திரேலிய நாடாளுமன்றக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய பின்னர், இரு நாட்டு அதிகாரிகள் குழு முன்னிலையில் சமூக பாதுகாப்பு, தண்டனை கைதிகள் பரிமாற்றம், போதைப் பொருட்கள் வியாபார தடுப்பு மற்றும் சுற்றுலா, கலை மேம்பாடு மற்றும் பண்பாடு ஆகியவற்றை தொடர்பான முக்கிய 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ஆஸி. பிரதமருடன் பேச்சு

இதன் பின்னர் நாடாளுமன்ற உரை மற்றும் இரு நாட்டு ஒப்பந்தங்கள் குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடியின் தனது 10 நாள் சுற்றுப் பயணத்தில் 4-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) மெல்பேர்ன் நகருக்கு சென்றடைந்தார். 161 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று மாலை பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் டோனி அபாட் வழங்கும் வரவேற்பு வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிகாக அங்கு மிக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x