Published : 13 Jul 2017 08:05 PM
Last Updated : 13 Jul 2017 08:05 PM
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற சீனாவின் லியு சியாபோ கல்லீரல் புற்று நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்ததாக வடகிழக்கு சீன நகரமான ஷென்யாங் அரசு தெரிவித்தது. இவருக்கு வயது 61.
லியு சியாபோவுக்கு புற்று நோய் காரணமாக உறுப்புகள் கோளாறடைந்து மரணமடைந்தார், அவரைக் காப்பாற்றும் முயற்சி பலனளிக்கவில்லை என்று ஷென்யாங் சட்டக் கழகம் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.
2009-ம் ஆண்டு சீன அரசுக்கு எதிராக கலகத்தைத் தூண்டியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து சிறையில் இருந்து வந்தார். அரசியல் சீர்த்திருத்தங்களுக்கான ‘சார்ட்டர் 08’ என்ற மனுவை எழுதுவதற்கு இவர் உதவி புரிந்ததாகவும் இதனால் அரசு அதிகாரத்தை எதிர்த்து கலகம் செய்ததாகவும் சீன அரசினால் குற்றம்சாட்டப்பட்டார். இவர் சமீபத்தில் சிறையிலிருந்து ஷென்யாங்கில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஜூலை 12-ம் தேதி லியுவின் ஆரோக்கியம் மேலும் மோசமடைந்தது. இவரது உடல் நலம் குறித்த தகவல்களை சீன அரசு தன் கட்டுக்குள் வைத்திருந்ததன் மீதும், இவரை நடத்திய விதம் குறித்தும் சர்வதேச அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளார்.
அவரை உயிர்காப்பு இயந்திர உதவியில் வைக்க வேண்டாம் என்று அவரது குடும்பத்தினர்கள் கூறியதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
சிறைக்கைதியாக இருந்து மரணமடைந்த 2-வது நோபல் பரிசு வென்ற நபராவார் லியு. முன்னதாக, 1938-ல் நாஜி ஜெர்மனியில் நோபல் பரிசு வென்ற கார்ல் வான் ஒஸீய்ட்ஸ்கி சிறையில் இருந்த போது மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.
லியுவுக்கு அயல்நாட்டு சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற முறையீடு பலமாக எழுந்த போதும் சீன அரசு, அங்கேயே சிறந்த மருத்துவ வசதி இருப்பதாகக் கூறி மறுத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT