Last Updated : 28 Jul, 2017 01:17 PM

 

Published : 28 Jul 2017 01:17 PM
Last Updated : 28 Jul 2017 01:17 PM

பனாமா ஊழல் வழக்கு: பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம்- பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அதிரடி

‘பனாமா ஊழல்’ வழக்கில் பாகிஸ் தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை உச்ச நீதிமன்றம் நேற்று தகுதி நீக்கம் செய்தது. இதையடுத்து பிரதமர் பதவியை அவர் உடனடியாக ராஜினாமா செய்தார். இதனால் பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில், ‘மொசாக் பொன்சேகா’ என்ற சட்ட நிறுவனம் உள்ளது. பிரபலமான இந்நிறுவனத்திடம் இருந்து ரகசிய தகவல்களை ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டது. இதை ‘பனாமாகேட் ஊழல்’ என்றும் கூறுகின்றனர். அதில் இந்தியா, பாகிஸ் தான் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், நடிகர்கள், தொழி லதிபர்கள் வரி ஏய்ப்புக்காக வெளி நாடுகளில் போலி நிறுவனங் களில் முதலீடு செய்திருப்பதாகவும் வங்கிகளில் முதலீடு வைத்திருப் பதாகவும் கூறப்பட்டிருந்தது.

  பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப் (67) மற்றும் அவரது குடும்பத்தார் பனாமா ஊழலில் பலன் அடைந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாயின. பாகிஸ் தானில் ஏற்கெனவே 2 முறை நவாஸ் பிரதமராக இருந்தபோது சட்டவிரோதமாக கோடிக்கணக் கான பணத்தை வெளிநாடுகளில் பதுக்கியதாகவும், லண்டனில் 4 அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட அசையா சொத்துகள் வாங்கி குவித்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து நவாஸ் ஷெரீப் பதவியைப் பறிக்க உத்தரவிடக் கோரி முன்னாள் கிரிக்கெட் வீரரும் முக்கிய எதிர்க்கட்சியான தெரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மேலும், அவாமி முஸ்லிம் லீக், ஜமாத் இ இஸ்லாமி ஆகிய கட்சியினரும் நவாஸுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். அதன் அடிப்படையில் கடந்த மே மாதம் 6 பேர் கொண்ட கூட்டு விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது.

இக்குழு நவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி, கடந்த 10-ம் தேதி அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், ‘‘நவாஸ் ஷெரீப்பும் அவரது குடும்பத்தினரும் வாழும் முறை அவர்களது வருமா னத்தை மீறியதாக இருக்கிறது. எனவே, அவர்கள் மீது புதிய ஊழல் வழக்கு பதிவு செய்ய வேண்டும்’’ என்று பரிந்துரை செய்திருந்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆசிப் சயீத் கோசா, இஜாஸ் அப்சல் கான், குல்சார் அகமது, ஷேக் அஸ்மத் சயீத், இஜாசுல் அஹ்சன் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தினமும் விசாரணை நடத்தி வந்தது. கடந்த 21-ம் தேதி வழக்கின் இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியிடப்பட்டது. இதை முன்னிட்டு தலைநகர் இஸ்லாமாபாத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்றத்தின் அறை எண் 1-ல் 5 நீதிபதிகளும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தீர்ப்பை வெளியிட்டனர்.

நீதிபதி இஜாஸ் அப்சல் கான் தீர்ப்பை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது: பனாமா ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரதமர் நவாஸ் ஷெரீப், நாடாளுமன்றத் துக்கும் இந்த நீதிமன்றத்துக்கும் நேர்மையாக நடந்துகொள்ள வில்லை. எனவே, அவருடைய எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்படுகிறது. தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து நவாஸ் ஷெரீப்புக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். பிரதமர் பதவி வகிக்கும் தகுதி அவருக்கு இல்லை. எனவே பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரீப் விலக வேண்டும். மேலும் நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியாம், மகன்கள் உசைன், ஹசன், மருமகன் கேப்டன் முகமது சப்தார் ஆகியோர் மீது 6 வாரங்களுக்குள் மீண்டும் ஊழல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். வழக்கு விசாரணையை 6 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும். கூட்டு விசாரணைக் குழு சேகரித்த எல்லா தகவல்களையும் தேசிய பொறுப்புடைமை நீதிமன்றத்திடம் அளிக்க வேண்டும். தவிர நிதி அமைச்சர் இஷாக் தர் மற்றும் கேப்டன் சப்தார் எம்.பி. ஆகியோரும் தகுதி நீக்கம் செய்யப்படுகின்றனர். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

தீர்ப்பு வெளியானதும் உச்ச நீதிமன்றத்துக்கு வெளியில் கூடியிருந்த ஏராளமான தெரிக் இ இன்சாப் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். இதுகுறித்து இம்ரான் கான் ட்விட்டர் பக்கத்தில், ‘‘காட் ஃபாதர் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது. உண்மையும் நீதியும் வெற்றி பெற்றுள்ளன’’ என்று கருத்து தெரிவித்தார். நவாஸ் ஷெரீப்பின் கணக்காய் வாளராக இஷாக் தர் இருந்துள் ளார். ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எப்படி சொத் துகள் வந்தன என்ற கணக்கு விவரங்களை உச்ச நீதிமன் றத்தில் இஷாக் தர் சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பிரதமர் யார்?

  ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் இஸ்லாமா பாத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது புதிய பிரதமராக நவாஸின் இளைய சகோதரர் ஷெபாஸ் ஷெரீபை தேர்வு செய்ய ஆதரவு தெரிவிக்கப்பட்டது. -

 

2 பிரதமர்களை நீக்கிய பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்

கடந்த 70 ஆண்டு பாகிஸ்தான் வரலாற்றில், 2 பிரதமர்களை உச்ச நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு அப்போதைய அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீது ஊழல் புகார் எழுந்தது. அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்போதைய பிரதமர் யூசுப் ரசா கிலானிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், சர்தாரி மீது நடவடிக்கை எடுக்காமல் கிலானி காலம் தாழ்த்தினார். அதனால் அதிருப்தி அடைந்த உச்ச நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கிலானியை தகுதி நீக்கம் செய்தது. அதனால் அவர் பதவி விலக நேர்ந்தது. தற்போது 2-வது முறையாக, ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப்பை உச்ச நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x