Published : 17 Apr 2017 11:31 AM
Last Updated : 17 Apr 2017 11:31 AM
துருக்கி அதிபருக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதற்காக நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் அந்நாட்டு அதிபர் எர்டோகன் வெற்றி பெற்றுள்ளார்.
துருக்கியைப் பொறுத்தவரை அந்நாட்டின் நாடாளுமன்றமே உச்சபட்ச அதிகாரத்தைக் கொண்டிருக்கும், ஆனால் அதிபர் பொது வாக்கெடுப்பில் எர்டோகன் பெற்றிருக்கும் இந்த வெற்றியின் மூலம், துருக்கியில் அதிபர் ஆட்சி முறை அதிக அதிகாரத்துடன் நடைமுறைக்கு வருவதற்கான சூழல் உருவாகியுள்ளது.
துருக்கியில் அதிபர் எர்டோகன் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க ராணுவத்தின் ஒரு பிரிவினர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்திய ராணுவப் புரட்சியை பொதுமக்கள் உதவியுடன் அதிபர் எர்டோகன் வெற்றிகரமாக முறியடித்தார். அப்போது ஏற்பட்ட மோதலில் 265 பேர் உயிரிழந்தனர். 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ராணுவப் புரட்சியில் ஈடுபட்ட 2,800 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து துருக்கி அரசியல் சாசனத்தில் அதிபருக்கு அதிகப்படியான அதிகாரம் வழங்கும் வகையில் நாடாளுமன்றத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று எர்டோகன் முடிவு செய்தார். அதைத் தொடர்ந்து அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
இதற்காக பொதுமக்களிடம் ஞாயிற்றுக்கிழமை பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த பொது வாக்கெடுப்பின் முடிவில் 51.4% பேர் புதிய அரசியல் சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாகவும், 48.6% புதிய அரசியல் சட்டத் திருத்தத்துக்கு எதிராகவும் வாக்களித்தனர். இதன் முடிவில் அதிபர் எர்டோகன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எர்டோகனின் வெற்றியை சாலைகளில் பெரும் திரளாக திரண்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது குறித்து துருக்கி அதிபர் எர்டோகன் கூறும்போது, "இது வரலாற்று முடிவாகும், மக்களுடன் இணைந்து நமது ஆட்சிமுறையை மாற்றியமைத்துள்ளோம். பிற நாடுகளும் துருக்கி மக்களின் முடிவை விரும்பும் என்று எண்ணுகிறேன்" என்றார்.
துருக்கி பிரதமர் பினாலியில்திரிம் கூறும்போது, ”இந்த முடிவு மக்களால் எடுக்கப்பட்டுள்ளது. நமது ஜனநாயகத்தின் வரலாற்றில் புதிய பக்கங்கள் உருவாகியுள்ளன" என்று கூறினார்.
எதிர்கட்சிகள் எதிர்ப்பு:
அதிபர் எர்டோகனின் இந்த வெற்றியை துருக்கியின் பிரதான இருகட்சிகள் எதிர்த்துள்ளன. பொது வாக்கெடுப்பில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியதுடன் மறுவாக்கு எண்ணிக்கைக்கும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT