Published : 09 Mar 2014 12:00 AM
Last Updated : 09 Mar 2014 12:00 AM

எமது ஒவ்வொரு அங்குலம் நிலப் பகுதியையும் கட்டிக் காப்போம்- அண்டை நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை

தமது உரிமைக்குரிய ஒவ்வொரு அங்குல நிலப் பகுதியையும் சீனா கட்டிக் காக்கும். விட்டுக் கொடுக்காது என்று அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ தெரிவித்திருக்கிறார்.

தம்முடன் எல்லைத் தகராறு கொண்டுள்ள அண்டை நாடுகளுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை யாகவே இது கருதப்படுகிறது., வருடாந்திர நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் பத்திரிகையாளர் களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டியில் வெளியுறவு அமைச்சர் வாங் யீ கூறியதாவது:

மற்ற நாடுகளுக்குச் சொந்த மான நிலம் எதையும் சீனா பறிக்காது. அதே வேளையில் தமது உரிமைக்குரிய நிலத்தில் ஒரு அங்குலத்தைக்கூட விட்டுக் கொடுக்கமாட்டோம். அவற்றை யாரும் பறிக்க அனுமதிக்க மாட்டோம். சின்ன நாடுகளை நாங்கள் எப்போதும் மிரட்டியதில்லை. இருப்பினும் எங்களைப் பற்றி குறை சொல்லி சீண்டினால் பொறுமையாக இருக்கமாட்டோம்.

சீனாவின் அண்டை நாடுகளில் நிலைமை அமைதியாகவே இருக்கிறது. எல்லைப் பிரச்சினை பற்றி ஆலோசனை நடத்திட சீனா தயார். சில நாடுகளுடனான நில எல்லை பிரச்சினை, கடல் பகுதி உரிமை மீதான சர்ச்சையை சரி யான முறையில் தீர்த்துக் கொள்ள விரும்புகிறோம். வரலாற்று உண்மைகள் மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் இவற்றை கையாள்வோம். இதில் எந்த மாற்றமும் இல்லை.

அண்டை நாடுகளுடன் நேர்மை, நட்புறவு, பரஸ்பர பலன் போன்ற ராஜீய உறவு முறையின் வழிகாட்டுதல்கள்படி நாங்கள் செயல்படுவோம்.

உலகின் மிகப்பெரிய பொரு ளாதார பலமிக்க நாடான சீனா மேற்கொள்ளும் சீர்திருத் தங்களால் அண்டை நாடுகளும் பொது மக்களும் அதிக அளவில் பயன்பெற அனுமதிப்போம். சீனாவின் ராஜீய உறவு முறை செயல்பாடுகள் மீது அண்டை நாடுகளுக்கு சந்தேகம் ஏற்பட் டால் அதுபற்றி கவனத்தில் கொண்டு பதில் சொல்ல கடமைப் பட்டுள்ளோம்.

வரலாறு மற்றும் சீனாவின் எல்லை உரிமை ஆகிய இரு கொள்கைகளில் விட்டுக் கொடுக் கும் பேச்சுக்கு இடமே இல்லை என்றார் வாங்.

தென் சீன கடல்பகுதியில் உள்ள தீவுகள் மீது சீனா உரிமை கோருவதை பிலிப்பைன்ஸ், வியத்நாம், மலேசியா, புரூனே ஆகியவை ஆட்சேபிக்கின்றன. மேலும் இந்த நாடுகளின் நிலைக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கிறது.

தென் சீன கடல்பகுதியில் உள்ள தீவுகள் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள தகராறு காரணமாக சீனா-ஜப்பான் உறவு சீர் குலைந்துள்ளது. சர்ச்சைக்குரிய தீவுகள் மீது சீனா, ஜப்பான் இரண்டுமே உரிமை கோருவதால் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சீன அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவை பற்றி சீன அமைச்சர் நேரடியாக எதையும் அவர் குறிப்பிடவில்லை. அருணாசலப் பிரதேசத்தை தெற்கு திபெத் என சீனா உரிமை கோரி வருகிறது. மேலும் இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடுருவுவது அடிக்கடி நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x