Published : 09 Jan 2014 10:21 AM
Last Updated : 09 Jan 2014 10:21 AM
உலக அளவில் நிதி, ஊடகம், விளையாட்டு மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இளம் சாதனையாளர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 23 பேர் இடம்பிடித்துள்ளனர். இதுதவிர மரியா ஷரபோவா, பாகிஸ்தான் சிறுமி மலாலா உள்ளிட்டோரும் இடம் பிடித்துள்ளனர்.
மொத்தம் 15 துறைகளில் சிறந்து விளங்கும் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பட்டியலை போர்ப்ஸ் இதழ் மூன்றாவது ஆண்டாக வெளியிட்டுள்ளது. 450 பேர் அடங்கிய இந்தப் பட்டியலில் ஆண்களும் பெண்களுமாக 23 இந்திய வம்சாவளி சாதனையாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.
இதில் இடம்பிடித்துள்ள இந்தியர்களான டாளரா கேப்பிட்டல் நிர்வாக இயக்குநர் கணேஷ் பெடனபட்லா (28), டிடபிள்யூ இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் வர்த்தகர் ருஷப் தோஷி (29), ஓச்-ஜிப் கேப்பிட்டல் மேனேஜ்மென்ட் மேலாளர் (போர்ட்போலியோ) சைதன்யா மேஹ்ரா (28), கிரீன் ஓக்ஸ் கேப்பிட்டல் நிறுவனர் நீல் மேத்தா (29), கம்ரோட் (இணையதள கருவி) தலைமை செயல் அதிகாரி சாஹில் லவிஞ்சியா (21) உள்ளிட்டோர் நிதித் துறையில் சாதனை புரிந்துள்ளனர்.
சமூக தொழில்முனைவோர் பிரிவில் கானா நாட்டின் மிகப்பெரிய அரிசி உற்பத்தி நிறுவனமான காட்கோ-வின் இணை நிறுவனர் கரன் சோப்ரா (29), ஏழை மாணவர்களுக்காக மும்பை, டெல்லி. சென்னையில் பயிற்சி மையங்களை நடத்தி வரும் அவந்தி குழும இணை நிறுவனர் கிருஷ்ண ராம்குமார் இதில் இடம்பிடித்துள்ளனர்.
பிரன்டீர் மார்க்கெட்ஸ் நிறுவனர் அஜைதா ஷா (29), குறைந்த செலவு கொண்ட காகிதத்தைக் கண்டுபிடித்த கவிதா சுக்லா (29), விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் மேகா பரேக் (28), சூப்பர் ஜயன்ட் கேம்ஸ் ஸ்டுடியோ இயக்குநர் அமிர் ராவ், அறிவியல் துறை (ஸ்டெம் செல்) சாதனையாளர் திவ்யா நாக், மருத்துவர் ரகு சிவுகுலா, மருத்துவர் சுர்பி சமா, சாப்ட்வேர் நிபுணர் சாம் சவுத்ரி, ஊடகத் துறையைச் சேர்ந்த சாயாமிந்து தாஸ்குப்தா, நியூரோ-இன்சைட் சிஇஓ பிரணவ் யாதவ், இளம் அறிவியலாளர் விருது பெற்றுள்ள ஈஷா கரே (18), அதித்தி மல்ஹோத்ரா உள்ளிட்ட இந்தியர்களும் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
இப்பட்டியலில் இடம் பிடித்துள்ள பாப் பாடகர்கள் ஜஸ்டின் பீபர், மைலி சைரஸ் மற்றும் டெய்லர் ஸ்விப்ட், டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, பெண்கள் உரிமை ஆர்வலர் சிறுமி மலால யூசுப்சாய் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT