Published : 24 Feb 2014 12:00 AM
Last Updated : 24 Feb 2014 12:00 AM

தலிபான் பூமியில் சேவையாற்றும் இந்திய டாக்டர்

ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில் தனியொரு இந்தியராக மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த டாக்டர் ஷா நவாஸ் மருத்துவச் சேவையாற்றி வருகிறார்.

தலிபான்களின் பிறப்பிடமான காந்தஹார் இப்போதும் பதற்றமாகவே காணப்படுகிறது. ஆபத்துகள் நிறைந்த இங்கு மருத்துவ சேவையாற்ற உள்ளூர் டாக்டர்களே தயங்கும் நிலையில் இந்திய டாக்டர் ஷா நவாஸ் கடந்த 2005 முதல் மருத்துவ சேவையாற்றி வருகிறார்.

தனது ஆப்கானிஸ்தான் வாழ்க்கை குறித்து அவர் கூறியதாவது:

நான் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவன். ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் என்னைச் சந்தித்து தனது ஊரில் மருத்துவ சேவையாற்ற யாரும் இல்லை என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

அவரே தனது சொந்த செலவில் காந்தஹாரில் மருத்துவமனை அமைத்து என்னையும் அழைத்தார். 2005 ஆகஸ்டில் இங்கு வந்தேன். எனது குடும்பம் மலேசியாவில் உள்ளது. ஆண்டுக்கு 2 முறை எனது குடும்பத்தினரை பார்க்க செல்வேன். ஆண்டுக்கு ஒருமுறை இந்தியாவுக்கும் செல்வோம்.

தூதரக கணக்குப்படி காந்தஹாரில் நான் மட்டும்தான் இந்தியன். ஆனால் இங்குள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் ஏராளமான இந்தியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்கள் துபையை சேர்ந்த நிறுவனங்கள் மூலம் இங்கு வந்துள்ளனர்.

தீவிரவாத அச்சுறுத்தல்

தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக இரவில் யாரும் நடமாட மாட்டார்கள். இங்கு வாழும் மக்கள் மிகவும் எளிமையானவர்கள். ஆனால் யாரையும் நம்ப மாட்டார்கள். நீங்கள் எந்த அமைப்பையும் சாராதவர்களாக இருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் அதையும் தாண்டி காந்தஹாரில் உயிர் வாழ அதிர்ஷ்டமும் வேண்டும்.

பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப் பச்சன், சல்மான் கான், சன்னி தியோல் ஆகியோர் காந்தஹாரில் மிகவும் பிரபலம். ஹிந்தி திரைப்படங்கள் இங்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகின்றன. ஆனால் நகரில் மட்டும்தான் டி.வி. பார்க்கலாம். கிராமப்புறங்களில் மின்சாரம் கிடையாது. டி.வி. கிடையாது. ரேடியோதான் அவர்களது பொழுதுபோக்கு.

மருத்துவ வசதிகள் மிகவும் குறைவாக உள்ள இந்த நகரில் மக்களுக்கு சேவையாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அவர் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானின் டார்னாக் பண்ணையில் இந்திய அரசு உதவியுடன் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. 1990-களில் இந்த பண்ணையில் தங்கியிருந்துதான் அமெரிக்கா மீது தீவிரவாத தாக்குதல் நடத்த அல்-காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் சதித் திட்டம் தீட்டி செயல்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x