Published : 28 Nov 2014 10:07 AM
Last Updated : 28 Nov 2014 10:07 AM

உலக மசாலா: ரஷ்யாவில் 100 அடி புதைகுழி

ஆண் குழந்தைகள் விளையாடக்கூடிய பொம்மைகள் என்றும் பெண் குழந்தைகள் விளையாடக்கூடிய பொம்மைகள் என்றும் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. சில ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகளுக்கான விளையாட்டுகள் மீது ஆர்வம் செலுத்துவது உண்டு. அதேபோல சில பெண் குழந்தைகளும் ஆண் குழந்தைகளுக்கு இருக்கும் விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்துகிறார்கள்.

இங்கிலாந்தில் வசிக்கும் 7 வயது மேகி கோல் பேட்மேன், சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் போன்ற சூப்பர் ஹீரோ பொம்மைகளை விரும்பக்கூடியவள். அம்மாவுடன் கடைக்குச் சென்றவள், பொம்மையின் அட்டையில் ‘ஆண் குழந்தைகளுக்கான பொம்மைகள்’ என்ற வரிகளைப் படித்து அதிர்ச்சியடைந்தாள். தன் அம்மாவிடம் வருத்தத்தை வெளிப்படுத்தினாள். உடனே அம்மா பொம்மை நிறுவனத்தின் கவனத்துக்கு இந்த விஷயத்தை எடுத்துச் சென்றார். ’நான் படிக்க ஆரம்பித்த பிறகுதான் மார்க்கெட்டில் இருக்கும் பல பொருள்கள் பெண் குழந்தைகளுக்குக் கிடையாது என்பதை அறிந்துகொண்டேன்’ என்கிறாள் மேகி. மன்னிப்புக் கேட்டுக்கொண்ட டெஸ்கோ நிறுவனம், பொம்மைகளின் அட்டைகளில் ஆண், பெண் என்று பாகுபாடு செய்யப்பட்டுள்ள வாசகத்தை நீக்கி, ’குழந்தைகளுக்கான பொம்மைகள்’ என்று மாற்றியிருக்கிறது.

உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மேகிகள் உருவானால்தான் சமூகம் திருந்தும்!

ரஷ்யாவின் பெர்ம் பகுதியில் 100 அடி அகலம் கொண்ட மிகப் பெரிய புதைகுழி ஒன்று உருவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பனியால் மூடப்பட்டுள்ள இந்தப் பகுதியில் சுரங்கமும் சுரங்கத்தில் வேலை செய்கிறவர்களின் வீடுகளும் இருக்கின்றன. திடீரென்று தோன்றிய பெரிய புதைகுழியால் எந்தச் சேதமும் ஏற்படவில்லை. புதைகுழிக்கு அருகில் இருப்பவர்களை உடனடியாக அப்புறப்படுத்திவிட்டனர். புதைகுழி உருவானது ஏன் என்று நிபுணர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். இன்னும் 15 நாட்களுக்குப் பிறகுதான் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியும். சுரங்கம் அமைந்துள்ள பகுதி அடிக்கடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்படுவதால், நிலம் பலமிழந்து இப்படிப் புதைகுழியாக உருவாகியிருக்கலாம் என்கிறார்கள்.

ரஷ்யாவில் அடுத்தடுத்து தோன்றும் மர்மக்குழிகளின் மர்மம் என்னவோ?

ஓவியரும் புகைப்படக்காரருமான பில் ஃபின்க் வித்தியாசமான கலைஞர். எந்த ஒரு பொருளை வைத்தும் புகைப்படங்கள் போன்று அழகான ஓவியங்களைத் தீட்டி விடுகிறார். முடி, மனிதச் சாம்பல், மண், பூவில் உள்ள மகரந்தம், ஓட்ஸ், முட்டை ஓடு என்று நீங்கள் எதில் படம் வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதில் வரைந்து கொடுத்துவிடுகிறார். ஒரு மனிதர் தான் இறந்த பிறகு, அந்தச் சாம்பலைக் கொண்டு வரைந்து கொடுக்கும்படி கேட்டிருந்தார். அதேபோல் வரைந்து கொடுத்திருக்கிறார் பில். நிறையப் பேர் தங்கள் முடிகளை வைத்து ஓவியங்களை வரைந்து கொடுக்கும்படி கேட்கிறார்கள். சிலர் மண்ணால் வரைந்த ஓவியங்களை விரும்புகிறார்கள். எதில் வரைந்தாலும் ஓவியம் என்னவோ அட்டகாசமாகத்தான் இருக்கிறது!

அப்பப்பா! ஓவியர்களின் கற்பனைக்கு எல்லையே இல்லை போல!

பல்லியைப் போன்றும் ஸ்பைடர் மேனைப் போன்றும் சுவரில் ஏற வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கிறது. இனி உங்களின் ஆசையை நிறைவேற்றிக்கொள்ளலாம். சிலிகான் அட்டைகளைக் கைகளிலும் கால்களிலும் மாட்டிக்கொண்டு, கண்ணாடிச் சுவரில் எளிதாக ஏறிச் செல்லலாம். மனிதனின் எடையைத் தாங்கும் அளவுக்கு சிலிக்கான் அட்டைகள் கண்ணாடி மீது இறுக்கமாகப் பற்றிக்கொள்கின்றன. இதனால் பயமின்றி கண்ணாடியில் ஏறலாம். ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான தடவைகள் பரிசோதித்திருக்கிறார்கள். ஒருமுறை கூட பரிசோதனை தோல்வியைச் சந்திக்கவில்லை. அதனால் தைரியமாக ஸ்பைடர் மேன் போல் கண்ணாடிச் சுவரில்ல் ஏறலாம் என்கிறார்கள்.

சுவர்களில் ஏறுகிற மாதிரி கண்டுபிடிச்சிடாதீங்க… அப்புறம் என்னென்ன பிரச்சினைகள் வரும்னு சொல்ல முடியாது…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x