Published : 12 Feb 2017 08:35 AM
Last Updated : 12 Feb 2017 08:35 AM

நியூசிலாந்தில் கரை ஒதுங்கும் திமிங்கலங்கள்!

நியூசிலாந்து நாட்டில் உள்ள 'கோல்டன் பே' அருகில் உள்ள பேர்வெல் ஸ்பிட் கடற்கரை ஓரம் சில நாட்களாக நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரை ஒதுங்கி வருகின்றன; அவை மேலும் வரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஒதுங்கியவற்றில் சில இறந்து விட்டன.

'திடீர்' என்று இத்தனை திமிங்கலங்களும் 'கோல்டன் பே' பக்கம் ஏன் ஒதுங்க வேண்டும்..? அவை 'தற்கொலை' க்கு முயற்சி செய்வததாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆழ்கடலை சொந்தம் ஆக்கிக் கொண்டுள்ள சுறாக்களின் அச்சுறுத்தல், மிரட்டல் காரணமாகவே திமிங்கலங்கள் இந்த நிலைக்கு விரட்டப்பட்டுள்ளதாக அல்லது தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள். ஒதுங்கிய திமிங்கலங்கள் சிலவற்றின் மீது சுறாக்களின் பற்கள் படிந்து இருப்பதைக் காண முடிவதாக அங்குள்ள 'பார்வையாளர்கள்' தெரிவிக்கின்றனர்.

'பொதுவாக, சுறாக்கள் மற்றும் திமிங்கலங்களால் நன்மையை விடவும் நமக்குத் தீமைகளே அதிகம். என்றாலும், சுறாக்களால் விரட்டப்படும் திமிங்கலங்களைக் காப்பாற்றுவது நமது கடமை அல்லவா..?' என்று வினவுகின்றனர் உள்ளூர் மக்கள்.

தற்போதுள்ள திமிங்கலங்களை 'சமாளிப்பதே' பெரும்பாடாக உள்ள நிலையில், மேலும் திமிங்கலங்கள் வந்துவிட்டால் என்ன ஆவது என்று செய்வது அறியாமல் திகைத்துப் போய் இருக்கின்றனர். அதனால், மேலும் திமிங்கலங்கள் ஒதுங்கி விடாதபடிக்கு இளைஞர்கள் பலர் அரண் அமைத்து பாதுகாத்து வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை மதியத்துக்குள் மிகப் பெரிய அளவிலான அலை எழுந்து, கரை சேர்ந்துள்ள திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் அடித்துச் சென்று விடுவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக பரவலாக நம்பப்படுகிறது.

இதே போன்று 2015 பிப்ரவரியில் சுமார் 200 திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய சம்பவம் நடந்ததாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகி உள்ளது.

பொதுவாகவே ஒவ்வோர் ஆண்டும் 300 திமிங்கலங்கள், டால்பின் மீன்கள் இவ்வாறு கடற்கரையில் ஒதுங்கி உயிரிழக்கின்றன; இது ஒன்றும் புதிய செய்தியல்ல. என்ன...? இம்முறை டால்பின்களை விடவும், திமிங்கலங்கள் மிக அதிக எண்ணிக்கையில் உள்ளதால் அதிகம் கவனிக்கப்படுவதாக கூறுகிறார்கள் சிலர்.

ஒலி அலைகளை வெளியிடும் சோனார் கருவிகளை பல்வேறு நாடுகளின் கடற்படைகள் பயன்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக திமிங்கலம், டால்பின், கடற்குதிரை ஆகியவற்றின் மூளை பாதிக்கப்படுவதாகவும் இனப்பெருக்கம் குறைவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே அத்தகைய சோனார் கருவிகளுக்கு அமெரிக்க கடற்படை தடை விதித்துள்ளது.

தற்போது நியூசிலாந்து கடற்கரையில் இளைஞர்கள் கூடி, கரை ஒதுங்கிய திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் கொண்டு செல்ல தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். திமிங்கலங்களின் உடல் சூடாவதை தடுக்க வாளிகளில் தண்ணீர் கொண்டு சென்று அவற்றின் மீது ஊற்றுகின்றனர். இதை பார்க்கிறபோது ஒரு நம்பிக்கை துளிர்க்கிறது.

'உலக இளைஞர்கள் களத்தில் இறங்கிவிட்டார்கள்!'

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x