Published : 17 Oct 2013 02:23 PM
Last Updated : 17 Oct 2013 02:23 PM

இளையோருக்கான கட்டுப்பாட்டைத் தளர்த்தியது ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்கில் 18 வயதுக்குட்பட்ட இளையோர் தங்கள் பதிவுகளை பொதுவெளியில் பகிர்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.

உலகின் நம்பர் 1 சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில், 18 வயதுக்குட்பட்டோர் புகைப்படங்கள் உள்ளிட்ட பதிவுகளைப் பகிர்வதில் இதுவரை சில கட்டுப்பாட்டுகளை வைத்திருந்தது. அதன்படி, இளையோர் ஒருவரின் பதிவு, அவரது நண்பர்களுக்கும், நண்பர்களின் நண்பர்களுக்கும் மட்டுமே இதுவரை காணக் கிடைத்தது.

இந்தக் கட்டுப்பாடுதான் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. இனி, இளையோரின் பதிவுகளை யார் வேண்டுமானாலும் பார்க்கக் கூடிய வசதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த வசதியை இளம் ஃபேஸ்புக் பயனாளி தனக்குத் தேவையென்றால் மட்டுமே சேர்த்துக்கொள்ள முடியும். தானாக, இந்த வசதி செய்துதரப்பட மாட்டாது என்று ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

டீன் ஏஜ் வயதினரின் புகைப்படங்கள் உள்ளிட்ட பதிவுகள், விஷமிகளால் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்ற முன்னெச்சரிக்கை உணர்வுடன்தான் இதுவரை இந்தக் கட்டுப்பாடு இருந்தது. ஆனால், இப்போது அந்தக் கட்டுப்பாட்டை தளர்த்தியதற்கு வேறு பல காரணங்களை ஃபேஸ்புக் முன்வைக்கிறது.

இளம் தலைமுறையினரின் கருத்துகள் பொதுவெளியில் பலருக்கும் சென்றடைவதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது; அரசியல், சமூக செயல்பாடுகள் மற்றும் சினிமா உள்ளிட்ட படைப்புகளில் தங்கள் எண்ணத்தை பலருடன் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது என்று ஃபேஸ்புக் கூறுகிறது.

அதேவேளையில், ஸ்நாப்ஷாட் மற்றும் வாட்ஸ்அப் முதலான சேவைகளை இளையோர் பலரும் தீவிரமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதால், சமூக வலைத்தள உலகில் இருக்கும் போட்டியை சமாளிக்கும் வகையில்தான் ஃபேஸ்புக் இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளதாகவும் இணையவாசிகள் கருதுகிறார்கள்.

ஃபேஸ்புக்கின் இந்த மாற்றம் மூலம் அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை வெகுவாகக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x