Published : 18 Nov 2014 09:17 AM
Last Updated : 18 Nov 2014 09:17 AM

உலக மசாலா: 145 கோடி ரூபாய் மர்ம கடிகாரம்

உலகிலேயே மிகவும் உயரமான மனிதரும் உலகிலேயே மிகவும் குள்ளமான மனிதரும் லண்டனில் சந்தித்துக்கொண்டனர். 31 வயதான சுல்தான் கோசன் துருக்கியில் வசிக்கிறார். 8 அடி 3 அங்குலம் உயரம் கொண்ட உலகிலேயே உயரமான மனிதராக வலம் வருகிறார். நேபாளில் வசிக்கும் 75 வயது சந்திர பஹதூர் டாங்கி, 1 அடி 9.5 அங்குலம் உயரம் கொண்ட மிகவும் குள்ளமான மனிதராக இருக்கிறார். கின்னஸ் உலக சாதனைகளின் 60வது ஆண்டு கொண்டாட்டத்துக்காக இவர்கள் இருவரையும் லண்டனுக்கு வரவழைத்திருக்கிறார்கள். பிக் பென் அருகில் இருவரும் நின்று தங்கள் உயரங்களை, பொதுமக்களுக்குக் காட்டியிருக்கிறார்கள். ’நானும் சந்திர பஹதூரும் ஒரே மாதிரியான பிரச்சினைகளைத்தான் சந்தித்திருக்கிறோம். மிகவும் நல்ல மனிதர். அவரைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி’ என்கிறார் சுல்தான். இருவரும் கை குலுக்கிக்கொள்வதற்கே மிகவும் சிரமப்பட்டனர்.

அடப்பாவமே… எதுவுமே அளவோடு இருந்தால்தான் பிரச்சினை இல்லை…

ஃப்ளோரிடாவில் தாயும் மகளும் ஒரே நாளில் குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார்கள். 40 வயது ஹெதெர் பெண்டிகாஃப், 20 வயது டெஸ்டினே மார்டின் இருவரும் ஒரே நேரத்தில் கர்ப்பமானார்கள். ’அம்மா அவருடைய கர்ப்பத்தைச் சொன்னபோது ரொம்ப த்ரில்லாக இருந்தது. நாங்கள் ஒரே நேரத்தில் கர்ப்பமான விஷயத்தை இருவருமே சாதாரணமாக எடுத்துக்கொண்டோம். ஆனால் பார்ப்பவர்கள் எல்லாம் கேள்வி கேட்டுத் துளைத்துவிட்டார்கள். நானும் அம்மாவும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக, எங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு, சந்தோஷமாக ஒரே நாளில் குழந்தைகளைப் பெற்றெடுத்தோம். என் மகனுக்கும் என் தங்கைக்கும் ஒரே வயது’ என்று மகிழ்கிறார் டெஸ்டினே மார்டின்.

இதெல்லாம் அவரவர் விருப்பம்… இதை விவாதம் செய்வதெல்லாம் நல்லாவா இருக்கு?

மாமூத் என்ற கம்பளி யானைகள் சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வசித்து வந்துள்ளன. சைபீரியாவின் பனிப்பகுதியில் புதைந்திருந்த ஒரு மாமூத்தின் முழு உருவமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்படியே தோண்டி எடுத்து, ஆராய்ந்து வருகிறார்கள். இது 40,000 ஆண்டுகளுக்கு முன்பு வசித்ததாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்தப் புதைப்படிமத்தில் இருந்து மாமூத்தை மீண்டும் க்ளோனிங் முறையில் மறு உருவாக்கம் செய்ய முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஐயையோ… ஜுராசிக் பார்க் படத்தில காட்டற மாதிரி டைனோசாரையும் கொண்டு வந்துடாதீங்க…

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த கடிகாரம் 145 கோடிக்கு கடந்த வாரம் விற்பனைக்கு வந்தது. விற்பனைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, கடிகாரத்தின் உரிமையாளர் ஷேக் சவுத் பின் முகம்மது அல் தானி இறந்துவிட்டார். மிகப் பெரிய கோடீஸ்வரரான 48 வயது ஷேக் திடீரென்று இதயக் கோளாறால் லண்டனில் இறந்துபோனார். உடனே கடிகாரத்தைப் பற்றிய முந்தைய வரலாறுகளை ஆராயத் தொடங்கிவிட்டனர். ஏற்கெனவே கடிகாரம் வைத்திருந்த உரிமையாளர்கள் சிலரும் திடீரென்று மரணம் அடைந்ததாகப் பீதியைக் கிளப்பியிருக்கிறார்கள்.

இனி யார் வாங்கப் போறாங்க அந்தக் கடிகாரத்தை?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x